சிகாரிப்புராவில் எடியூரப்பாவின் செல்வாக்கை நிரூபிப்பாரா விஜயேந்திரா?
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பி.எஸ்.எடியூரப்பா. இவர் தனது சொந்த மாவட்டமான சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதியில் இதுவரை 9 முறை தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். இதில் 8 தடவை வெற்றி பெற்று தனது செல்வாக்கு மிகுந்த தொகுதி என எடியூரப்பா சிகாரிப்புராவை நம்பி வருகிறார்.
இந்த நிலையில் எடியூரப்பா வயது மூப்பு காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து ஒதுக்கி விட்டதாகவும், சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அறிவித்து விட்டார். மேலும் சிகாரிப்புரா தொகுதியில் தனது மகனும், பா.ஜனதா துணைத்தலைவருமான விஜயேந்திராவுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று எடியூரப்பா கேட்டு வந்தார். ஆனால் விஜயேந்திராவுக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா மேலிடம் தயக்கம் காட்டியது. ஆனாலும் எடியூரப்பா தொடர்ந்து தனது மகனுக்கு சீட் வழங்க வேண்டும் என்று மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.
கர்நாடகத்தின் பலம் வாய்ந்த லிங்காயத் தலைவரான எடியூரப்பாவை பகைத்து கொள்ள விரும்பாத கட்சி மேலிடம், அவரது நெருக்கடிக்கு பணிந்து சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திராவுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.
வக்கீலான விஜயேந்திரா, கர்நாடக பா.ஜனதா இளைஞர் அணி செயலாளராக பணியாற்றி வந்தார். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு கர்நாடக பா.ஜனதா துணை தலைவராக பொறுப்பேற்றார். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு எதிராக அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மேலிடம் விஜயேந்திராவுக்கு சீட் வழங்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட வருணாவில் விஜயேந்திராவுக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா மேலிடம் முயற்சி செய்தது.
ஆனால், மகனின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வருணா தொகுதியில் விஜயேந்திராவை களமிறக்கி 'ரிஸ்க்' எடுக்க எடியூரப்பா விரும்பவில்லை. மேலும் தனக்கு செல்வாக்கு மிக்க, பாதுகாப்பான சிகாரிப்புரா தொகுதியிலேயே தனது மகன் விஜயேந்திராவுக்கு டிக்கெட் வழங்கியே தீர வேண்டும் என்று எடியூரப்பா விடாப்பிடியாக இருந்தார். அதன்படி விஜயேந்திராவுக்கு சிகாரிப்புராவில் பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது.
சிகாரிப்புரா தொகுதியில் எடியூரப்பா பலம் வாய்ந்த தலைவராக உள்ளார். அங்கு 9 முறை போட்டியிட்டு 8 முறை வெற்றி பெற்றுள்ளார். 7 முறை பா.ஜனதா சார்பிலும், ஒரு முறை தான் புதிதாக தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சி சார்பிலும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் மகாலிங்கப்பா என்பவரிடம் எடியூரப்பா தோல்வியை தழுவியிருந்தார். சிகாரிப்புரா பா.ஜனதாவின் கோட்டை என்பதை விட எடியூரப்பாவின் கோட்டை என்றே சொல்லலாம்.
காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த மாலதேசுக்கு அக்கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. கடந்த முறை எடியூரப்பாவிடம் வெற்றியை பறிகொடுத்த மாலதேஷ், இந்த முறை விஜயேந்திராவை வீழ்த்தி வெற்றி பெற தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் கடந்த முறை 3-வது இடத்தை பிடித்த பாலேகர் சீட் கேட்டு வந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்க ஜனதாதளம்(எஸ்) கட்சி மறுத்துவிட்டது. அவருக்கு பதிலாக சுதாகர் ஷெட்டி என்பவருக்கு அக்கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது.
சிகாரிப்புரா தொகுதியில் எடியூரப்பா செய்த வளர்ச்சி பணிகளும், அவரது செல்வாக்கும் விஜயேந்திராவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் பா.ஜனதா எதிர்ப்பு அலை, சிவமொக்காவில் இந்து அமைப்பினர் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் விஜயேந்திராவுக்கு பாதகமாக அமையலாம். சிகாரிப்புரா தொகுதியில் எடியூரப்பாவின் செல்வாக்கை விஜயேந்திரா நிரூபிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.