பணி இடமாறுதலுக்கு லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை எடுப்பார்களா? -குமாரசாமி பேட்டி
பணி இடமாறுதலுக்கு லஞ்சம் கைமாறும் விஷயத்தில் ஆதாரம் கொடுத்தால் மந்திரியை நீக்குவார்களா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபை ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கனவை நிறைவேற்றுவேன்
அதிகாரிகள் பணி இடமாற்றத்திற்கு பணம் கைமாறுவதாக நான் கூறினேன். யாரோ ஒரு மந்திரி, இதற்கு ஆதாரம் இருந்தால் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. ஆதாரம் கொடுப்பதற்கான தைரியம் எனக்கு உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தும் தைரியம் இந்த அரசுக்கு உள்ளதா?. இந்த காங்கிரஸ் அரசு இன்னும் 'ஹனிமூன்' காலத்தில் தான் உள்ளது. இப்போது அந்த அளவுக்கு முறைகேடுகள் நடக்கின்றன.
வரும் நாட்களில் எத்தனை விஷயங்கள் நடைபெறும். எனது குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆவணங்கள் கேட்கிறார்கள். அவர்களின் கனவை நான் நிறைவேற்றுவேன். நான் ஆதாரம் கொடுத்தால் சம்பந்தப்பட்ட மந்திரியை நீக்குவார்களா?. அந்த மந்திரியை பதவி நீக்கம் செய்யும் தைரியம் இந்த அரசுக்கு உள்ளதா?.
ஆதாரங்களை வெளியிடுவேன்
நான் என்னிடம் உள்ள ஆதாரங்களை சபையில் வெளியிடுகிறேன். நான் ஆதாரம் கொடுத்தால் இந்த அரசு எங்கு இருக்குமோ என்று தெரியவில்லை. இந்த அரசு சில நாட்கள் நிம்மதியாக இருக்கட்டும் என்று விடுகிறேன். அரசு தவறை திருத்திக் கொண்டால் நல்லது என்று விட்டு வைத்துள்ளேன். முந்தைய பா.ஜனதா அரசு மீது காங்கிரஸ் கட்சி ஏராளமான ஊழல் புகார்களை கூறியது. ஆனால் அதற்கு ஒரு ஆதாரத்தை கூட வெளியிடவில்லை.
தேர்தல் நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விளம்பரம் செய்தனர். ஆனால் ஒரு ஆதாரத்தை ஆவது அவர்கள் வெளியிட்டனரா?. பொய்களை கூறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. எனது ஆட்சி காலத்தில் நடைபெற்ற அதிகாரிகள் பணி இடமாறுதல் குறித்தும் விசாரணை நடத்துவதாக காங்கிரசார் சொல்கிறார்கள். அதுபற்றி விசாரணை நடத்தட்டும்.
விசாரணை நடத்தட்டும்
அதற்கு முன்பு 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பணி இடமாறுதல் குறித்தும் விசாரணை நடத்தட்டும். காங்கிரசார் பகல் கொள்ளையில் இறங்கியுள்ளனர். ஒவ்வொரு அதிகாரி பதவிக்கும் ஒரு விலையை நிர்ணயித்து வசூல் செய்கிறார்கள். நேரம் வரும்போது இதற்கான ஆதாரங்களை நிச்சயம் வெளியிடுவேன். நான் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன். முதல்-மந்திரி பதவிக்கு டி.கே.சிவக்குமார் ஏற்கனவே முயற்சி செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் காங்கிரசார் சிலர் சதீஸ் ஜார்கிகோளி முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.