ராமநகரில் கரை சேருவாரா நிகில் குமாரசாமி?


ராமநகரில் கரை சேருவாரா நிகில் குமாரசாமி?
x

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு அருகே உள்ள மாவட்டம் ராமநகர். இந்த மாவட்டத்தில் ராமநகர், மாகடி, சென்னப்பட்டணா, கனகபுரா ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், ராமநகர் சட்டசபை தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கோட்டையாக உள்ளது.

ராமநகர் தொகுதியில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 11 சட்டசபை தேர்தலும், 2018-ம் ஆண்டு இடைத்தேர்தலும் நடந்துள்ளது. இதில் சட்டசபை தேர்தலில் தலா 4 முறை ஜனதாதளம்(எஸ்) கட்சியும், 4 முறை காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. 2018-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) வெற்றி பெற்றிருந்தது. ஜனதா கட்சி 2 முறையும், ஜனதாதளம் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 2018-ம் ஆண்டு வரை கடைசியாக நடந்த 4 சட்டசபை தேர்தல்களில் ஜனதாதளம்(எஸ்) கட்சியே வெற்றி பெற்றுள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கடந்த 1994-ம் ஆண்டு ராமநகர் தொகுதியில் ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி 4 முறை தொடர்ச்சியாக ெவற்றி பெற்றுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு அவர் ராமநகர் மற்றும் சென்னப்பட்டணா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனால் அதே ஆண்டே குமாரசாமி, ராமநகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அங்கு நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி அனிதா குமாரசாமி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

தற்போது நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ. அனிதா குமாரசாமி, ராமநகர் தொகுதியில் போட்டியிடவில்லை என்றும், தனது மகன் நிகிலுக்காக ராமநகர் தொகுதியை விட்டு கொடுப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி, ராமநகர் தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். ஏற்கனவே நிகில் குமாரசாமி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன் தேர்தலில் மண்டியா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதாவிடம் தோல்வியை தழுவினார். அதன்பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், பின்னர் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அவர் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். தற்போது ராமநகர் தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனதாதளம்(எஸ்) கட்சி பலமாக இருக்கும் தொகுதிகளில் ராமநகரும் ஒன்று. அங்கு ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் நிகில் குமாரசாமி எளிதாக வெற்றி பெறுவார் என்றே கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த இக்பால் ஹுசைன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் கவுதம் கவுடா என்பவர் போட்டியிடுகிறார். நிகில் குமாரசாமியை வீழ்த்த இரு தேசிய கட்சிகளும் வரிந்து கட்டி நிற்கின்றன. மேலும் 3 கட்சி வேட்பாளர்களும் ராமநகர் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை வைத்தும், ஜனதாதளம்(எஸ்) கட்சி குடும்ப கட்சி என்றும் கூறி வாக்கு சேகரித்து வருகிறது. பா.ஜனதா இரட்ைட என்ஜின் ஆட்சியின் சாதனை குறித்து மக்களிடம் கூறி ஓட்டு வேட்டை நடத்தி வருகிறது.

ராமநகரில் ஜனதாதளம்(எஸ்) கட்சி பலமாக இருந்தாலும், அக்கட்சி குடும்ப உறுப்பினர்களுக்கு தான் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக உள்ளூர் நிர்வாகிகளிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இது நிகில் குமாரசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த நிகில் குமாரசாமி ராமநகர் சட்டசபை தேர்தலில் கரை சேருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்

ஆண்டு வெற்றி தோல்வி

1972 புட்டசாமய்யா(என்.சி.ஓ.)-26,775 அப்துல் சமாத்(காங்.)-20,978

1978 அப்துல் சமாத்(காங்.)-27,837 போரய்யா(ஜனதா கட்சி)-20,875

1983 போரய்யா(ஜனதா கட்சி)-45,076 அப்துல் சமாத்(காங்.)-26,200

1985 புட்டசாமி கவுடா(ஜனதா கட்சி)-38,284 லிங்கப்பா(காங்.)-36,280

1989 லிங்கப்பா(காங்.)-60,275 போரய்யா(ஜனதா கட்சி)-22,022

1994 தேவேகவுடா(ஜனதா தளம்)-47,986 லிங்கப்பா(காங்.)-38,392

1999 லிங்கப்பா(காங்.)-46,553 கிரிகவுடா(பா.ஜ.க.)-26,400

2004 குமாரசாமி(ஜ.தளம்-எஸ்)-69,554 லிங்கப்பா(காங்.)-44,638

2008 குமாரசாமி(ஜ.தளம்-எஸ்)-71,700 ருத்ரேஷா(பா.ஜ.க.)-24,440

2013 குமாரசாமி(ஜ.தளம்-எஸ்)-83,447 மரிதேவரு(காங்.)-58,049

2018 குமாரசாமி(ஜ.தளம்-எஸ்)-92,626 இக்பால் ஹுசைன்(காங்.)-69,990


Next Story