பேட்ராயனபுராவில் வெற்றி பயணத்தை தொடருவாரா கிருஷ்ண பைரேகவுடா?
தொகுதி சீரமைப்பின்படி கடந்த 2008-ம் ஆண்டு பேட்ராயனபுரா தொகுதி உருவாக்கப்பட்டது. எலகங்கா தொகுதிக்கு உட்பட்ட 7 மாநகராட்சி வார்டுகள், 8 கிராம பஞ்சாயத்துக்கள், 3 பெங்களூரு நகர பஞ்சாயத்து வார்டுகளை பிரித்து பேட்ராயனபுரா தொகுதி உருவாக்கப்பட்டு உள்ளது.
அதாவது ஜக்கூரு, தனிசந்திரா, பேட்ராயனபுரா, கோடிஹள்ளி, வித்யாரண்யபுரா, தொட்டபொம்மசந்திரா, குவெம்பு நகர் ஆகிய மாநகராட்சி வார்டுகளையும், தொட்டஜாலா, சிக்கஜாலா, உன்சே மாரதஹள்ளி, பாகலூர், மாரானஹள்ளி, பெட்ட ஹலசூரு, சொன்னபனஹள்ளி, பண்டி கொடிஹள்ளி ஆகிய 8 கிராம பஞ்சாயத்துகள், பெட்ட ஹலசூரு, உன்சேமாரனஹள்ளி, பாகலூரு ஆகிய நகர பஞ்சாயத்து வார்டுகளையும் இணைத்து பேட்ராயனபுரா தொகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 185 ஆண்களும், 2 லட்சத்து 38 ஆயிரத்து 227 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 116 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 93 ஆயிரத்து 528 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் கடந்த 2018-ம் ஆண்டு வரை 3 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளது. இந்த 3 தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தனது அரசியல் பயணத்தை ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து தொடங்கினார். இவரது தந்தை பைரேகவுடா. இவர், கோலார் மாவட்டம் வேம்கல் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் திடீரென்று உயிர் இழக்கவே கடந்த 2003-ம் ஆண்டு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய கிருஷ்ண பைரேகவுடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.
ஆனால் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்ட அவர் 2004-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதே வேம்கல் தொகுதி வேட்பாளராக களம் இறங்கினார். இதில் 95 ஆயிரத்து 563 வாக்குகளை பெற்ற கிருஷ்ண பைரேகவுடா 75 ஆயிரத்து 359 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீராமை(20 ஆயிரத்து 204 ஓட்டுகள்) வீழ்த்தினார். 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிருஷ்ண பைரேகவுடா தொகுதி மாறி களம் இறங்கினார். அதாவது பெங்களூருவில் உள்ள பேட்ராயனபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார்.
இதில் 60 ஆயிரத்து 979 ஓட்டுகள் பெற்ற கிருஷ்ண பைரேகவுடா 9 ஆயிரத்து 352 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் ரவி (51 ஆயிரத்து 627) என்பவரை தோற்கடித்தார். அதைதொடர்ந்து 2013-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் கிருஷ்ண பைரேகவுடா போட்டியிட்டார். இந்த தேர்தலில் 32 ஆயிரத்து 400 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி மகுடம் சூடினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ரவி 63 ஆயிரத்து 725 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். கிருஷ்ண பைரேகவுடா மொத்தம் 96 ஆயிரத்து 125 வாக்குகளை வாங்கியிருந்தார். கடந்த ஆண்டு நடத்த தேர்தலில் 1,14,964 வாக்குகளை பெற்ற கிருஷ்ண பைரேகவுடா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ரவியை (1,09,293) 5 ஆயிரத்து 671 வாக்குகள் வித்தியாத்தில் மீண்டும் வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார்.
வருகிற சட்டசபை தேர்தலிலும் கிருஷ்ண பைரேகவுடா காங்கிரஸ் சார்பில் இதே தொகுதியில் போட்டியிட உள்ளார். பா.ஜனதா சார்பில் கடந்த 3 முறையும் தோல்வி அடைந்த ரவி
கழற்றி விடப்பட்டு, தம்மேஷ் கவுடா என்பவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஜனதா தளம்(எஸ்) சார்பில் பி.நாகராஜூ என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். கடந்த 3 முறை இங்கு எம்.எல்.ஏ.வாக உள்ள கிருஷ்ண பைரேகவுடா இங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து உள்ளார். இது அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த தொகுதியில் அடிப்படை வசதிகள், சாலை உள்ளிட்ட பணிகள் மந்த கதியிலேயே நடந்து வருகிறது. இது இவருக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது.
இதேபோல் 3 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள கிருஷ்ண பைரேகவுடாவை தொகுதி
மக்கள் எளிதாக சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே இவர் மீது அங்குள்ள மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், இது தேர்தல் சமயத்தில் அவருக்கு பாதகமாக அமையலாம் எனவும் கூறப்படுகிறது.
மக்களின் அதிருப்தி அலையை தாண்டி இந்த தொகுதியில் அவர் ெவற்றி பயணத்தை தொடருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்
2008-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் இதுவரை 3 சட்டசபை தேர்தல்கள் நடந்து உள்ளன. அதன் முடிவுகள் பின்வருமாறு:-
ஆண்டு வெற்றி தோல்வி
2008 கிருஷ்ண பைரேகவுடா(காங்.) - 60,979 ரவி(பா.ஜனதா) - 51,627
2013 கிருஷ்ண பைரேகவுடா(காங்.) - 96,125 ரவி(பா.ஜனதா) - 63,725
2018 கிருஷ்ண பைரேகவுடா(காங்.) - 1,14,964 ரவி(பா.ஜனதா) - 1,09,293