'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் நாட்டுக்கு நல்லது - முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
நாடாளுமன்ற நிலைக்குழு, நிதி ஆயோக், தேர்தல் கமிஷன் ஆகியவற்றின் அறிக்கைகளும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளன என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.
ரேபரேலி,
நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதுபற்றி ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராம்நாத் கோவிந்த், உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம், நாட்டுக்கு நல்லது செய்யும். இதை அமல்படுத்துவதால், பணமும், நாட்டின் வளங்களும் மிச்சமாகும். அப்படி சேமிக்கப்படும் பணத்தை வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தலாம். மேலும், இத்திட்டம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். அரசு எந்திரத்துக்கு எந்த சுமையும் ஏற்படாது. மக்கள் பலன் அடைவார்கள். நானும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். என் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பலருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
ஏறத்தாழ அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி உள்ளேன். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லா கட்சிகளுமே இந்த திட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. மேலும், நாடாளுமன்ற நிலைக்குழு, நிதி ஆயோக், தேர்தல் கமிஷன் ஆகியவற்றின் அறிக்கைகளும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.