மல்லேசுவரத்தில் 4-வது வெற்றியை பெறுவாரா அஸ்வத்நாராயண்?


மல்லேசுவரத்தில் 4-வது வெற்றியை பெறுவாரா அஸ்வத்நாராயண்?
x

பெங்களூருவில் படித்தவர்கள் அதிகம் உள்ள தொகுதியாக மல்லேசுவரம் தொகுதி திகழ்கிறது. இங்கு கடந்த

3 முறை பா.ஜனதா கட்சியை சேர்ந்த அஸ்வத் நாராயண் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஜனதா கட்சியின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி 1994-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு மாற்று கட்சியினரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இங்கு வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பவர்களாக பிராமணர் மற்றும் ஒக்கலிகர் சமுதாய மக்கள் உள்ளனர். குறிப்பாக இங்கு தமிழ் பேசும் பிராமண மக்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை மல்லேசுவரம் தொகுதியில் 1957-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 14 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் ஜனதா கட்சி, பா.ஜனதா தலா 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுயேச்சைகள் 2 முறையும், ஜனதாதளம் கட்சி 2 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு

மந்திரி அஸ்வத்நாராயண் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் மந்திரி அஸ்வத் நாராயண் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில் அனூப் அய்யங்கார் களமிறக்கப்பட்டு உள்ளார். ஜனதா தளம்(எஸ்) சார்பில் உத்கார்ஷ் போட்டியிட இருக்கிறார். இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 581 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 411 ஆண்களும், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 164 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 6 பேரும் அடங்குவர்.

இந்த தொகுதியில் பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகெரே, மல்லேசுவரம், சுப்பிரமணியநகர், காயத்திரி நகர், அரண்மனை நகர், காடு மல்லேசுவரம், ராஜ்மஹால் ஆகிய 7 வார்டுகள் உள்ளன. அதிக வார்டுகளை தனது கையில் வைத்து உள்ள பா.ஜனதா பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது. இதேபோல் 2 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள அஸ்வத் நாராயண், சாலை வசதி உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு உள்ளார் என கூறப்படுகிறது. இது இவருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த தொகுதியில் மந்திரி அஸ்வத் நாராயண் 4-வது வெற்றியை பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த தேர்தல்களில் வெற்றிதோல்வி நிலவரம்

மல்லேசுவரம் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 14 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-

ஆண்டு வெற்றி தோல்வி

1957 பார்த்தசாரதி(சுயே.) -10,552 குமரன்(காங்.) -8,866

1962 தேவய்யா(சுயே.) -8,097 கே.ஸ்ரீராமுலு(காங்.) -7,832

1967 எம்.எஸ்.கிருஷ்ணா(சி.பி.எம்.) -12,977 டி.கே.டி கவுடா(காங்.) -11,641

1972 எம்.எஸ்.கிருஷ்ணா(இந்திய கம்யூனிஸ்டு) -31,925 ராம்தேவ்(சுயே.) -13,506

1978 ராம்தேவ்(ஜனதாகட்சி) -32,936 எம்.எஸ்.கிருஷ்ணா(இந்திய கம்யூனிஸ்டு) -20,918

1983 ராம்தேவ்(ஜனதாகட்சி) -43,083 கே.வி.ஆச்சார்(காங்.) -14,483

1985 எம்.ரகுபதி(ஜனதாகட்சி) -38,445 விஜயலட்சுமி ராம்பட்(காங்.) -16,746

1989 ஜீவராஜ் ஆல்வா(ஜனதாதளம்) -34,955 ராம்தேவ்(சுயே.) -31,285

1994 ஆனந்தநாயக்(ஜனதாதளம்) -43,772 சந்திரசேகர்(பா.ஜனதா) -19,142

1999 சீதாராம்(காங்.) -39,864 ரகுபதி(ஜக்கிய ஜனதாதளம்) -21,829

2004 சீதாராம்(காங்.) -47,029 அஸ்வத் நாராயண்(பா.ஜனதா) -37,252

2008 அஸ்வத் நாராயண்(பா.ஜனதா) -53,794 சீதாராம்(காங்.) -45,611

2013 அஸ்வத் நாராயண்(பா.ஜனதா) -57,609 சிவராம்(காங்.) -36,543

2018 அஸ்வத் நாராயண்(பா.ஜனதா) -83,130 கெங்கல் ஸ்ரீபட ரேணு(காங்.) -29,130


Next Story