விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x

பங்காருபேட்டை தாலுகாவில் விளைநிலங்களுக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமடைந்தன.

கோலார் தங்கவயல்:

பங்காருபேட்டை தாலுகாவில் விளைநிலங்களுக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமடைந்தன.

காட்டுயானைகள்

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா தமிழகம்-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது செங்கனகிரி கிராமம். இந்த கிராமம் மாஸ்தி பஞ்சாயத்திற்கு உட்பட்டது ஆகும். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் இந்த கிராமம் உள்பட 6-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டமாக புகுந்தன. அவைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தின.

தக்காளி, முட்டை கோசு, மக்காசோளம், துவரை மற்றும் காய்கறி பயிர்களையும், பப்பாளி மரங்களையும் நாசப்படுத்தின. அதாவது அவற்றை தும்பிக்கையால் பிடுங்கி தின்றும், எறிந்தும், காலால் மிதித்தும் நாசப்படுத்தின. இதில் ரூ.30 லட்சம் அளவில் பயிர்கள் நாசமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதையடுத்து அந்த காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

தர்ணா போராட்டம்

நேற்று காலையில் விளைநிலங்களுக்கு சென்ற விவசாயிகள் பயிர்கள் நாசமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு நஷ்ட ஈடு கோரி மாஸ்தி அருகே தமிழ்நாட்டுக்கு செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

தகவல் அறிந்த மாஸ்தி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தர்ணா போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் விவசாயிகள் கேட்கவில்லை. தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

அப்போது இனி யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விடாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாவும், சாகுபடி பயிர்கள் நாசமானதற்கு இழப்பீடு கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story