தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்; கிராம மக்கள் கோரிக்கை


தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்; கிராம மக்கள் கோரிக்கை
x

என்.ஆர்.புரா அருகே தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. காட்டுயானைகளை, வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு, கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிக்கமகளூரு;

காட்டுயானைகள் அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் அலேஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இதனால் வனப்பகுதியில் இருந்து அலேஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 2 காட்டுயானைகள் இரைதேடி அலேஹள்ளி கிராமத்திற்குள் புகுந்துள்ளது. பின்னர் காட்டுயானைகள், வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்களுக்குள் புகுந்து பாக்கு, தென்னை மற்றும் வாழை மரங்களை முறித்துப்போட்டு சேதப்படுத்தின.

மேலும் காட்டுயானைகள் அருகே உள்ள விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றன. காட்டுயானை அட்டகாசத்தால் நாகராஜ், ரகுமூர்த்தி, யசோதா, வாசுதேவா ஆகியோரின் விளைநிலங்கள் நாசமானது. இதனால் அவர்களுக்கு, பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுபற்றி அவர்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானை நாசப்படுத்திய விளைநிலங்களை பார்வையிட்டனர்.

அப்போது கிராம மக்கள், விவசாயிகள் வனத்துறையினரிடம் காட்டுயானைகள் ஊருக்குள் நிரந்தரமாக நுழையாதபடி விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும்படியும் கோரிக்கை வைத்தனர். இதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


Next Story