எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஏன்..? பா.ஜ.க. வெளியிட்ட பரபரப்பு வீடியோ
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்ததாக கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
புதுடெல்லி:
நாடாளுமன்ற மக்களவைக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி 2 நபர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டத்தில் தொடர்ந்து புயலை கிளப்பி உள்ளது. நாடாளுமன்ற அத்துமீறல் பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்ததாக கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். இதுவரை 92 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை ஜனநாயக படுகொலை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. ஏன் இந்த அளவுக்கு மொத்தமாக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்? என்று மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற வாசலில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோவை, பாஜக தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து, விளக்கம் அளித்துள்ளது.
அதில், "எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்று நாடே யோசித்துக்கொண்டிருந்தால், அதற்கான காரணம் இதுதான். குடியரசு துணைத் தலைவரை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கேலி செய்கிறார், அதை ராகுல் காந்தி உற்சாகப்படுத்துகிறார். இதன்மூலம் இவர்கள் சபையில் எவ்வளவு பொறுப்பற்றவர்களாகவும், அத்துமீறுபவர்களாகவும் இருந்தார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறது" என்று பாஜக குறிப்பிட்டுள்ளது.