பா.ஜனதா கோட்டைகளில் கூட பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார்? - காங்கிரஸ் கேள்வி


பா.ஜனதா கோட்டைகளில் கூட பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார்? - காங்கிரஸ் கேள்வி
x

கோப்புப்படம்

சூரத், இந்தூர் தொகுதிகளின் வேட்பாளர்கள் வாபஸ் பெற அச்சுறுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் ேவட்பாளரின் வேட்புமனு, குறைபாடுகள் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் வாபஸ் பெறப்பட்டன.

அதனால், அத்தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதுபோல், மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் கன்டி பாம், வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இரு நிகழ்வுகளும் காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில், "கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து சூரத், இந்தூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதில்லை. இருப்பினும், 2024-ம் ஆண்டு, இரு தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்களும் வேட்புமனுவை வாபஸ் பெறும் அளவுக்கு அச்சுறுத்தவும், மிரட்டவும் செய்யப்பட்டுள்ளனர்.

பாரம்பரிய பா.ஜனதா கோட்டைகளில் கூட பிரதமர் மோடி ஏன் இவ்வளவு நடுக்கம் அடைகிறார், பயப்படுகிறார்...?" என்று அவர் கூறியுள்ளார்.


Next Story