கன்னட கொடிக்கு தீவைத்தது ஏன்?; உத்தரபிரதேச கம்ப்யூட்டர் என்ஜினீயர் பரபரப்பு தகவல்கள்
பெங்களூருவில் கன்னட கொடிக்கு தீவைத்தது ஏன்? என்பது பற்றி கைதான உத்தரபிரதேச கம்ப்யூட்டர் என்ஜினீயர் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் கன்னட கொடிக்கு தீவைத்தது ஏன்? என்பது பற்றி கைதான உத்தரபிரதேச கம்ப்யூட்டர் என்ஜினீயர் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
பெங்களூருவில் கன்னட கொடிக்கு தீவைத்ததாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான அம்ருதேஷ் (வயது 30) என்பவரை எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது பெங்களூருவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்ல அம்ருதேஷ் முயன்றுள்ளார். அப்போது அவரை போலீசார் அடித்து விரட்டியுள்ளனர். இதன் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பெங்களூருவிலேயே ஊரடங்கு முடியும் வரை அம்ருதேஷ் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சொந்த ஊருக்கு செல்ல முடியாததால்...
தான் சொந்த ஊருக்கு செல்ல முடியாததற்கு போலீசார் தான் காரணம் என அவர்களை பழிவாங்கும் முடிவுக்கு அம்ருதேஷ் சென்றுள்ளார். ஊரடங்கு முடிந்ததும் உத்தரபிரதேசத்திற்கு சென்று, வீட்டில் இருந்தபடியே அவர் வேலை செய்திருக்கிறார். சமீபத்தில் பெங்களூருவுக்கு வந்து அவர் மீண்டும் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போதும் சிகரெட் புகைக்கும் விவகாரத்தில் போலீசாருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்த பிரச்சினையில் பிரபலமாக நினைத்த அம்ருதேஷ் கன்னட கொடிக்கு தீவைத்த போது, பொதுமக்கள் மடக்கி பிடித்திருந்தனர். பொதுமக்கள் பிடிக்காவிட்டால், சமூக வலைதளங்களில் கன்னட கொடிக்கு தீவைக்கும் வீடியோவை வெளியிட முடிவு செய்திருந்தார். மேலும் தன்னை தாக்கிய போலீசாரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் விசாரணையின் போது அம்ருதேஷ் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.