7.30 மணிக்கு ஏன் வெளியே சென்றாய்? பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பெண்ணிடம் போலீசார் கேள்வி


7.30 மணிக்கு ஏன் வெளியே சென்றாய்? பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பெண்ணிடம் போலீசார் கேள்வி
x

உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பெண், சான்றுகளை சேகரிப்பதற்காக சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை தேடி சென்றுள்ளார்.

நொய்டா,

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் செக்டார் 48 பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் வீடியோ எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். அவர் மழை பெய்தபோது, அதில் நனைந்தபடி வீடியோ எடுக்க சென்றிருக்கிறார்.

இதனை நபர் ஒருவர் கவனித்து இருக்கிறார். அந்த பெண்ணை நெருங்கி அவர் அணிந்திருந்த ஷார்ட்சை (ஒரு வகை கால் சட்டை) பிடித்து, இழுத்து கிழித்து விட்டார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்தபடி காணப்பட்டார். அப்போது, அவருக்கு உதவியாக வேறு 2 சிறுமிகள் ஓடி வந்தனர்.

அவர்களை பார்த்ததும் அந்நபர் திரும்பி பார்க்காமல் ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதி கோரி, செக்டார் 49 பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார்.

ஆனால், பணியில் இருந்த போலீசாரோ எப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுத்து இருக்கின்றனர். அதற்கு பதிலாக, இந்த நேரத்தில் மழையில் நனைய ஏன் சென்றாய்? என பெண்ணிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

இதன்பின்பு அந்த பெண், சான்றுகளை சேகரிப்பதற்காக சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை தேடி சென்றுள்ளார். ஆனால், பல கேமிராக்கள் செயல்படாமல் இருந்துள்ளது தெரிய வந்தது.

இதனால் அடுத்து என்ன செய்வது என யோசித்த அந்த பெண், ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். அவருக்கு நடந்த விசயத்தில் அனைவரின் கவனமும் திசை திரும்ப வேண்டும் என்பதற்காக, அவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பற்றிய வாக்குமூலம் ஒன்றை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

இதற்கு போலீசார் அளித்த பதிலையும் அதில் சேர்த்து கொண்டார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வெளிவந்து வைரலானது. இதனால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. நொய்டா போலீசார் இதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்றே கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story