வாரணாசியில் தெருக்களில் பிணங்களை எரிக்கும் அவலம்
கங்கை நதியில் நீர்மட்டம் உயர்ந்ததால், வாரணாசி படித்துறைகள் மூழ்கின. இதனால், தெருக்களிலும், ெமாட்டை மாடியிலும் பிணங்கள் எரிக்கப்படுகின்றன.
வாரணாசி,
வடமாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதியின் நீர்மட்டம் நேற்று அபாய அளவான 70.262 மீட்டரை தாண்டியது. அதுபோல், வருணா ஆற்றிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால், வாரணாசியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. புகழ்பெற்ற படித்துறைகளும் நீரில் மூழ்கின. அஸ்சி படித்துறையில் இருந்து நமோ படித்துறை வரை உள்ள பகுதிகள் நீரில் மூழ்கி விட்டன.
இதன் காரணமாக, உடல் தகனத்துக்காக கொண்டு வரப்பட்ட உடல்களை எரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஹரிஷ்சந்திரா, மணிகர்ணிகா ஆகிய படித்துறைகளுக்கு கொண்டுவரப்பட்ட உடல்கள், அருகில் உள்ள தெருக்களிலும், வீட்டு மொட்டை மாடிகளிலும் தகனம் செய்யப்பட்ட அவலம் நடந்தது. இடப்பற்றாக்குறை காரணமாக, உடல் தகனத்துக்கு உடல்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் ெவள்ளம் புகுந்தது. ஹகுல்கஞ்ச், நைபஸ்டி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.
அவர்களுக்காக 40 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 280 குடும்பங்களை சேர்ந்த 1,300 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக மருத்துவ குழுக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளன.
அடிப்படை வசதிகள் செய்து தரப்பபட்டுள்ளன. கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கப்படுகிறது.
பிரதமர் உத்தரவு
வாரணாசி தொகுதி எம்.பி. என்ற முறையில், பிரதமர் மோடி, மாவட்ட கலெக்டர் கவுசல் ராஜ் சர்மாவையும், ஆணையாளர் தீபக் அகர்வாலையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.
முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு எல்லா உதவிகளும் அளிக்குமாறு அவர் உத்தரவிட்டார். தேவைப்பட்டால், பிரதமர் அலுவலகத்தை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.