சொரப்பில் சகோதரயுத்தத்தில் வெல்லப்போவது யார்?
சிவமொக்கா மாவட்டம் சொரப் தொகுதியில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை நடந்த 7 சட்டசபை தேர்தல்களில் பங்காரப்பா தொடர் வெற்றிகளை குவித்து வந்தார். 1996-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்திய அரசியலில் அவர் பயணிக்க தொடங்கினார். தற்போதும் இந்த தொகுதியில் பங்காரப்பா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து 7 முறை வெற்றி வாகை சூடிய பங்காரப்பா கடந்த 1996-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிட எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சொரப் தொகுதி 1996-ல் இடைத்தேர்தலை சந்திக்க நேரிட்டது. இதில் கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது மகன் குமார் பங்காரப்பா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் எம்.ஆர்.பட்டீல் களமிறங்கினார். இதில் 44,689 ஓட்டுகள் பெற்று குமார் பங்காரப்பா வெற்றி வாகை சூடினார். எம்.ஆர்.பட்டீல் 12,108 ஓட்டுகளை பெற்றார்.
1999-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிட்ட குமார் பங்காரப்பா 38,773 ஓட்டுகளை பெற்று சுயேச்சையாக களமிறங்கிய கே.பி.பிரகாசை (26,278 ஓட்டுகள்) வீழ்த்தினார். 2004-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குமார் பங்காரப்பா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அவரது சகோதரர் மது பங்காரப்பா கோதாவில் குதித்தார். இதில் 44,677 வாக்குகளை பெற்று குமார் பங்காரப்பா வெற்றி மகுடம் சூட்டினார். அவரது சகோதரர் மது பங்காரப்பா 32,748 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 2008-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நின்ற குமார் பங்காரப்பா பா.ஜனதா வேட்பாளர் ஹாலப்பாவிடம் வெற்றியை பறிகொடுத்தார். ஹாலப்பா 53,552 வாக்குகளையும், குமார் பங்காரப்பா 32,499 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இதற்கிடையே பா.ஜனதாவில் இருந்து விலகிய மது பங்காரப்பா ஜனதாதளம் (எஸ்) கட்சியில் ஐக்கியமானார். அக்கட்சி சார்பில் 2013-ம் ஆண்டு தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் குமார் பங்காரப்பா, கர்நாடக ஜனதா கட்சி சார்பில் ஹாலப்பா ஆகியோரும் மல்லுக்கட்டினர். இதில் 58,541 ஓட்டுகள் பெற்று முதல் தடவையாக மது பங்காரப்பா வெற்றியை ருசித்தார். அவரை எதிர்த்து கர்நாடக ஜனதா கட்சி சார்பில் நின்ற ஹாலப்பா 37,316 ஓட்டுகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். குமார் பங்காரப்பா 33,176 ஓட்டுகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார்.
இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குமார் பங்காரப்பா பா.ஜனதா கட்சியில் இணைந்தார். 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட குமார் பங்காரப்பா, ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்ட தனது சகோதரர் மது பங்காரப்பாவை 13,286 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். குமார் பங்காரப்பா 72,091 வாக்குகளும், மது பங்காரப்பா 58,805 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
வருகிற சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் குமார் பங்காரப்பா களம் இறங்குகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த அவரது சகோதரர் மது பங்காரப்பா, சொரப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சி பசுரு சந்திரேகவுடா என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் சகோதர யுத்தம் நடக்கும் தொகுதிகளில் சொரப்பும் ஒன்று என்பது கடந்த சில தேர்தல்களில் நிரூபணமாகி வருகிறது. இந்த முறையும் சகோதரயுத்தத்தில் வெல்லபோவது குமார் பங்காரப்பாவா? இல்லை மது பங்காரப்பாவா? என்பது வருகிற 13-ந்தேதி தெரிந்துவிடும்.