மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு பயங்கரவாதி ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார்-யார்?
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு பயங்கரவாதி ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார்-யார் என தமிழ்நாடு, கேரளாவிலும் கர்நாடக போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூரு:
மங்களூரு குண்டுெவடிப்பு
கர்நாடக மாநிலம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், குக்கர் வெடி குண்டை எடுத்துச் சென்ற பயங்கரவாதி ஷாரிக் மற்றும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பலத்த காயம் அடைந்து பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவை பாணியில் அரங்கேறியுள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஷாரிக்கின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் தென்னிந்திய மாநிலங்களில் பயங்கரவாத அமைப்பை நிறுவ முயன்றதும், மங்களூருவில் 3 கோவில்கள் உள்பட 6 இடங்களில் நாசவேலை செய்ய சதி திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. ஷாரிக், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று தங்கியதும் தெரியவந்துள்ளது. இதனால் அங்கு ஷாரிக்குடன் தொடர்புடையவர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
செல்போன் ஆய்வு
மேலும் ஷாரிக் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர விரும்பி உள்ளார். இதன்காரணமாக அவர் டெட்டனேட்டர் மூலம் குக்கர் குண்டை தயாரித்து, நாசவேலையில் ஈடுபட்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கவனத்தை ஈர்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதில், சர்ச்சைக்குரிய பேச்சாளர் ஜாகீர் நாயக் என்பவர் பேசிய 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வைத்திருந்தார். அவரது பேச்சு மூலம் ஈர்க்கப்பட்ட ஷாரிக், பயங்கரவாத செயல்களில் ஈடுபட உந்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த செல்போனில் உள்ள எண்களுக்கு அதிகாரிகள் தொடர்புகொண்டபோது, பல எண்கள் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஷாரிக் பெரும்பாலும் கோவை, கேரளாவை சேர்ந்த சிலரது செல்போன் எண்களுக்கு அடிக்கடி பேசியதும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த குண்டு வெடிப்பு வழக்கின் பின்னணியில் யார்-யார் உள்ளனர்?, எந்தந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளது என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்.ஐ.ஏ. விசாரிக்க உத்தரவு
இந்த நிலையில், மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க கர்நாடக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று, மத்திய அரசும் மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் கர்நாடக போலீசார் இதுவரை நடத்திய விசாரணை மற்றும் ஆதாரங்கள், பிற தகவல்களை அறிக்கையாக தயாரித்து என்.ஐ.ஏ. வசம் ஒப்படைத்துள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு தயராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடக போலீசார் தீவிர விசாரணை
மேலும் இந்த வழக்கில் ஷாரிக் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவமொக்காவில் தேசிய கொடியை எரித்த வழக்கில் ஷாரிக், அவரது கூட்டாளிகள் மாஸ்முனி, சையது யாசின் ஆகியோர் மீது கர்நாடக போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மங்களூருவில் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத்தவிர கர்நாடக போலீசார் மைசூரு, தமிழ்நாடு கோவை, கன்னியாகுமரி, கேரள மாநிலம் கொச்சி ஆகிய பகுதிகளுக்கும் தனித்தனி குழுக்கள் சென்று ஷாரிக்குடன் செல்போனில் பேசிய நபர்கள், ஷாரிக் அந்த பகுதிகளுக்கு சென்று தங்கியிருந்த போது அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக ஷாரிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், யார்?, அவருக்கு நிதிஉதவி அளித்தது யார் என்பது குறித்து கர்நாடக போலீசார் இரு மாநிலங்களிலும் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது செல்போனில் சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்தும் விசாரணை நடந்து வருகிறது.
பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் இந்த வழக்கில் ஷாரிக் வாக்குமூலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த அவர் குணமாகி வாய் திறந்தால் தான் மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு மட்டுமின்றி கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கிலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளதால், ஷாரிக் பற்றி பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.
ஷாரிக்கிடம் விசாரணை நடத்த இன்னும் ஒருவாரம் ஆகலாம்?
மங்களூரு ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் 45 சதவீத தீக்காயம் அடைந்த பயங்கரவாதி ஷாரிக், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 8 டாக்டர்கள் கொண்ட குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குண்டுவெடிப்பில் ஷாரிக்கின் கை, கால் விரல்கள் சிதைந்துள்ளதாலும், முகம், தாடை, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாலும் அவரிடம் விசாரணை நடத்த முடியாமல் போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தவித்து வருகிறார்கள்.
மேலும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. அவரது வயிற்றில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், நுரையீரலில் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்காக அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் அவர் குணமாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் ஷாரிக் குணமடைந்தாலும் அதிகாரிகளின் கேள்விகளுக்கு போதுமான பதில் அளிப்பாரா என்பது சந்தேகம் தான் என்று போலீசார் கருதுகிறார்கள்.