கொரோனாவுக்கு தந்தையை பறிகொடுத்தவர்: பி.ஏ. இறுதி ஆண்டு தேர்வு எழுதும் 15 வயது மாணவி


கொரோனாவுக்கு தந்தையை பறிகொடுத்தவர்: பி.ஏ. இறுதி ஆண்டு தேர்வு எழுதும் 15 வயது மாணவி
x

கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றில் தனது தந்தையையும், தாத்தாவையும் இழந்து விட்டார்.

இந்தூர்,

சாதிக்க வேண்டும் என்ற அனல், இதயத்தில் கனன்று கொண்டிருந்தால் போதும், எத்தகைய சோதனையையும் சாதனையாக மாற்றிக்காட்ட முடியும். இதற்கு வாழும் எடுத்துக்காட்டாய் மாறி வருகிறார், ஒரு 15 வயது மாணவி.

இந்தூர் சிறுமி

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர், தனிஷ்கா சுஜித் (வயது 15). வண்ணக்கனவுகளை நெஞ்சில் சுமக்கத் தொடங்கும் பருவத்தில், 2020-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றில் தனது தந்தையையும், தாத்தாவையும் இழந்து விட்டார்.

படிப்பில் படுசுட்டியான இவர், தன் சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகளையும் தாண்டி வாழ்க்கையில் சாதித்தாக வேண்டும் என்று நினைத்தார்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், 13 வயதிலேயே 12-ம் வகுப்புத்தேர்வினை நேரடியாக எழுதி தேர்ச்சி பெற்றார்.

பி.ஏ. இறுதி ஆண்டுத்தேர்வு

இந்தூர் தேவி அகில்யா பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத்தேர்வில் இவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறப்பு நேர்வாக பி.ஏ. உளவியல் படிப்பு படிக்க அனுமதி வழங்கப்பட்டது. இப்போது இவர் பி.ஏ. இறுதி ஆண்டு தேர்வினை 19-ந்தேதி முதல் எழுத இருக்கிறார்.

உத்வேகம் தந்த சந்திப்பு

இதற்கிடையே கடந்த 1-ந்தேதி மாநிலத்தின் தலைநகரான போபாலுக்கு, பிரதமர் மோடி வந்தபோது, அவரை தனிஷ்கா சுஜித் சந்தித்தார். அந்தச் சந்திப்பு இவருக்கு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

பிரதமர் போபாலுக்கு வந்தபோது, நான் அவரை 15 நிமிடம் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் பி.ஏ. தேர்ச்சி பெற்ற பின்னர் அமெரிக்காவில் சட்டப்படிப்பு படிக்க விரும்புவதைத் தெரிவித்தேன். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆவதுதான் எனது எதிர்காலக்கனவு என்றேன்.

எனது லட்சியம் பற்றி கேட்டவுடன் பிரதமர் என்னை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வக்கீல்கள் வாதாடுவதைக் கவனிக்குமாறு அறிவுறுத்தினார். அது, எனது லட்சியம் நிறைவேறுவதற்கான ஊக்கத்தை அளிக்கும் என்று கூறினார். பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறி இருககிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தாயார் உருக்கம்

இந்த மாணவியின் தாயார் அனுபா, "எனது கணவரையும், என் மாமனாரையும் கொரானாவுக்கு பறிகொடுத்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன். ஆனால் 2, 3 மாதங்கள் ஆன நிலையில், நான் என் மகளின் படிப்புக்காக, அவளது எதிர்காலத்துக்காக என் எஞ்சிய வாழ்வை அர்ப்பணித்துப் போராட முடிவு செய்தேன்" என கண்கள் கலங்க கூறினார்.


Next Story