நேரம் வரும்போது 'இந்தியா' கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும் - மம்தா பானர்ஜி
மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கொல்கத்தா,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 240 இடங்களில் வெற்றி கிடைத்தது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.
நாளை இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், இந்த பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாவது;
"மோடியின் பதவியேற்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காது என யாரும் நினைக்க வேண்டாம். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நேரம் வரும்போது இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும். தற்போது கிடைத்துள்ள முடிவுக்கு பிறகு மோடி பிரதமர் ஆகவே கூடாது. பாஜகவை நாங்கள் உடைக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்களின் கட்சிக்குள்ளேயே பல பிரிவுகள் வரத் தொடங்கிவிட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.