அதானி குழும மோசடி பற்றிய விசாரணை நிலவரம் என்ன? - மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி


அதானி குழும மோசடி பற்றிய விசாரணை நிலவரம் என்ன? - மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
x

அதானி குழும மோசடி தொடர்பான விசாரணையின் நிலவரம் என்ன என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி தொடர்புடைய போலி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த பங்குச்சந்தை முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. இருப்பினும், இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின. பிரதமர் ேமாடிக்கும், அதானிக்கும் தொடர்பு இருப்பதாக அக்கட்சிகள் கூறி வருகின்றன.

விசாரணை நிலவரம்

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி, மத்திய அரசுக்கு மேலும் ஒரு கேள்வி விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

அதானி குழுமம் தொடர்புடைய போலி நிறுவனங்களின் பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' சிறிது காலமாக கண்காணித்து வந்ததாக எங்களுக்கு தெரியும். அந்த விசாரணையின் நிலவரம் என்ன?

மவுனத்தை கலையுங்கள்

மேலும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும், ஒரு ரஷிய நிறுவனத்துக்கும் இடையே சந்தேகத்துக்கிடமான பண பரிமாற்றம் நடந்துள்ளது. எண்ணெய்க்காக ரஷிய நிறுவனத்துக்கு பொதுத்துறை நிறுவனங்கள் அதிக விலை கொடுத்துள்ளது.

அதற்கு பிரதி உபகாரமாக, மற்றொரு எரிசக்தி வளத்துக்காக அரசியல் தொடர்புடைய ஒரு இந்திய தனியார் நிறுவனத்துக்கு அந்த ரஷிய நிறுவனம் அதிக விலை கொடுத்துள்ளது.

இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story