திருவனந்தபுரத்தில் பயங்கரம்: மனைவியை கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
திருவனந்தபுரத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் கமால் ராபி (வயது 52). இவருடைய மனைவி தஸ்னீம் (42), குலசேகரத்தை சேர்ந்தவர். திருமணத்திற்கு பிறகு இருவரும் திருவனந்தபுரத்தில் குடியேறினர்.
அங்கு கமலேஸ்வரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். துபாயில் பணிபுரிந்து வந்த கமால் ராபி திருவனந்தபுரத்திற்கு வந்து கடந்த 6 வருடங்களாக தொழில் செய்து வந்தார். காருக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தினார்.
இதற்கிடையே கொரோனா காரணமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் கமால் ராபிக்கும், அவரது மனைவி தஸ்னீமுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தஸ்னீம் அருகில் உள்ள தனது தங்கையின் வீட்டில் 2 மகள்களான தனூரா மற்றும் தைசீரா ஆகியோருடன் தங்கி வந்தார். பகல் நேரத்தில் மகன் ஹலீபா மற்றும் கணவருக்கு உணவு சமைப்பதற்காக மட்டும் அவரது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் மகன் ஹலீபா கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பினார்.
ஆனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அக்கம் பக்கத்தினரிடம் விவரத்தை கூறினார். மேலும் பூந்துறை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு படுக்கை அறையில் தஸ்னீம் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து கயிற்றால் இறுக்கப்பட்ட நிலையில் இருந்தது. கழிவறை ஜன்னலில் கமால் ராபி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவத்தை வைத்து பார்க்கும் போது கமால் ராபி, மனைவி தஸ்னீமை கொன்று விட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பில் தஸ்னீமின் அலறல் சத்தம் கேட்டதாகவும், வழக்கமாக கணவன், மனைவி இடையே நடக்கும் தகராறு காரணமாக இருக்கலாம் என கருதி அமைதியாக இருந்து விட்டதாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் கமால் ராபி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் எழுதி வைத்த ஒரு கடிதமும் போலீசாரிடம் சிக்கி உள்ளது.
பின்னர் தம்பதி இருவருடைய உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.