இந்த சுதந்திர தின உரையில் பிரதமர் என்ன வாக்குறுதிகளை அளிக்கப் போகிறார்?"- சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
2017-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் நடந்ததா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரை ஆற்றுகிறார்.
இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியின் 2017-ம் ஆண்டு சுதந்திர தின விழா உரையை சுட்டிக்காட்டி அவரை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், அனைவருக்கும் வீடு, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவது, புல்லட் ரயில் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்' என பிரதமர் மோடி 2017-ம் ஆண்டு சுதந்திர தின விழா உரையில் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் அது நடந்ததா? இந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி உரையில் பிரதமர் என்ன வாக்குறுதிகளை அளிக்கப்போகிறார்?'' எனப் கேள்வி எழுப்பி இருக்கிறார்.