ஒரு ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்துகொண்டால்..? வரதட்சணைக்கு எதிராக கேள்வி கேட்ட நிதிஷ் குமார்


ஒரு ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்துகொண்டால்..? வரதட்சணைக்கு எதிராக கேள்வி கேட்ட  நிதிஷ் குமார்
x

ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக அவரிடம் வரதட்சணை பெறுவதை விட மோசமானது வேறு எதுவும் இல்லை என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.

பாட்னா,

பீகார் தலைநகர் பாட்னாவில் புதிதாக அமைக்கப்பட்ட மகளிர் விடுதியை அம்மாநில முதல்-மந்திரி நிதீஷ் குமார் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் நிலவி வரும் வரதட்சணை முறைக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் பேசியதாவது, "எங்கள் காலத்தில் எல்லாம் பெண்களுக்கு என தனியாக கல்லூரிகள் இருக்காது. அதை நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன்.

ஆனால் இன்றோ, பெண்கள் மருத்துவம், பொறியியல் என அனைத்து வகையான துறைகளிலும் தடம் பதிக்கின்றனர். பெண்களுடைய மேம்பாட்டுக்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறோம். நாங்கள் வரதட்சனைக்கு தடை விதித்தோம்.

வரதட்சணை திருமண முறைக்கு எதிராகவும் குழந்தை திருமணத்துக்கு எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டோம். ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக அவரிடம் வரதட்சணை பெறுவதை விட மோசமானது வேறு எதுவும் இல்லை.

பெண்ணை திருமணம் செய்தால் மட்டுமே குழந்தைகள் பிறக்கும். ஒரு ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்துகொண்டால் எப்படி குழந்தை பிறக்கும்? வரதட்சணை வாங்கவில்லை என அறிவிக்கப்பட்ட திருமண நிகழ்வுகளுக்கு மட்டுமே செல்வேன் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்" என்று கூறினார்.

வரதட்சணை திருமண முறைக்கு எதிராக அவர் பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story