தமிழக பெண், 2 சிசுக்கள் உயிரிழந்த விவகாரத்தில் நடந்தது என்ன?; பரபரப்பு தகவல்கள்


தமிழக பெண், 2 சிசுக்கள் உயிரிழந்த விவகாரத்தில் நடந்தது என்ன?; பரபரப்பு தகவல்கள்
x

தமிழக பெண், 2 சிசுக்களுடன் இறந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்

துமகூரு (மாவட்டம்) டவுன் பாரதிநகர் அருகே ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி(வயது 30). இவரது சொந்த ஊர் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஆகும். கஸ்தூரியின் கணவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். கஸ்தூரிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரி கடந்த 2-ந் தேதி பிரசவ வலியால் துடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கஸ்தூரியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் தாய் அட்டை, ஆதார் அட்டை இல்லாததால் கஸ்தூரிக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் உஷா மறுத்து விட்டார்.

இதன் காரணமாக நேற்று முன்தினம் கஸ்தூரிக்கு 2 ஆண் சிசுக்கள் பிறந்து இறந்ததுடன், ரத்த போக்கு அதிகமானதால் கஸ்தூரியும் பலியாகி இருந்தார். இந்த சம்பவம் துமகூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சிறிய வீட்டில் வசித்தார்

இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.அதாவது தமிழ்நாடு கள்ளக்குறிச்சியை சேர்ந்த கஸ்தூரி முதலில் பெங்களூருவில் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். தம்பதி 2 பேரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 4 மாதத்திற்கு முன்பு கஸ்தூரியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது கஸ்தூரி கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து, தனது 6 வயது மகளுடன் வேலைக்காக துமகூருக்கு வந்துள்ளார். அங்கு ஜெயம்மா என்பவரின் சிறிய வீட்டில் கஸ்தூரி தனது மகளுடன் வசித்து வந்தார். கூலி வேலைக்கும் அவர் சென்று வந்துள்ளார்.

கடந்த 2-ந் தேதி இரவு கஸ்தூரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், துமகூரு ஆஸ்பத்திரிக்கு அக்கம் பக்கத்தினர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு டாக்டர் உஷா சிகிச்சை அளிக்க மறுத்ததுடன், பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி கூறியுள்ளார்.

ஆம்புலன்சுக்கு பணம் இல்லை

துமகூருவில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்புலன்சில் வருவதற்கு கஸ்தூரியிடம் பணம் இல்லை. இதன் காரணமாக வேறு வழியின்றி வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் வைத்து நேற்று முன்தினம் காலையில் அவருக்கு முதலில் ஆண் சிசு பிறந்துள்ளது. 2-வது சிசு பிறக்கும் போது கஸ்தூரிக்கு ரத்த போக்கு அதிகமாகி பலியானதுடன், அந்த ஆண் சிசுவும் உயிர் இழந்திருந்தது. கஸ்தூரிக்கு வீட்டில் வைத்தே பிரசவம் நடந்ததால் அவரும், 2 சிசுக்களும் பலியான தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கஸ்தூரியின் கணவர் இறந்து விட்ட நிலையில், தற்போது அவரும் இறந்து விட்டதால், 6 வயது மகள் ஆதரவற்ற நிலையில் உள்ளாள். அந்த சிறுமியை பெண்கள் பாதுகாப்பு மையத்தில் அனுமதித்து 18 வயது வரை இலவச கல்வி பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் பேசப்படும் என்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.


Next Story