பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாதித்தது என்ன? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
கருப்பு பணமோ, கள்ள நோட்டுகளோ தடுக்கப்படவில்லை என்றால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ன சாதித்தது? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு கடந்த 2016- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம் மற்றும் 500 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி மீண்டும் சாடியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது:-
உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் பொருளாதாரத்தை நிலைநிறுத்திய 8 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டில் மீண்டும் கள்ளநோட்டுகள் பெருகிவிட்டதாக தெரிகிறது.
2018-19 மற்றும் 2023-24-க்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.500 கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 மடங்காக அதிகரித்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் இருந்து ரூ.2,000 கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று அரசாங்கம் கூறினாலும், இது ஒரு கண்துடைப்பு என்பதே உண்மை. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு அதிக மதிப்புள்ள நோட்டுகளுக்கு கள்ளநோட்டுகள் வேகமாக நகர்ந்துள்ளன. கருப்பு பணமோ, கள்ள நோட்டுகளோ தடுக்கப்படவில்லை என்றால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ன சாதித்தது? இவ்வாறு அந்த பதிவில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.