உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? - அதிபர் ஜெலன்ஸ்கி திடுக்கிடும் தகவல்


உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? - அதிபர் ஜெலன்ஸ்கி திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 20 Jan 2023 5:20 AM IST (Updated: 20 Jan 2023 2:23 PM IST)
t-max-icont-min-icon

உள்துறை மந்திரி உள்பட 18 பேரை பலிகொண்ட உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.

கீவ்,

உக்ரைன் நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் மழலையர் பள்ளி ஒன்றின் பின்புறம் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் அந்த நாட்டின் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, ராஜாங்க மந்திரி எவ்ஹென் யெனின் உள்பட 18 பேர் பலியானது அங்கு தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் உள்துறை மந்திரி பலியானதால், தற்காலிக உள்துறை மந்திரியாக உக்ரைன் தேசிய போலீஸ் படையின் தலைவர் இஹோர் கிளைமென்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்து வருகிற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் காணொலிக்காட்சி வழியாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

அவர், "போர் காலத்தில் நடந்தது விபத்து இல்லை. இந்த சோகம் போரின் விளைவுதான்" என குறிப்பிட்டார். இதை உக்ரைன் மக்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதுபற்றி உள்ளூர்வாசியான விளாடிமிர் யெர்மெலென்கோ பி.பி.சியிடம் பேசும்போது, "இந்த விபத்துக்கு போர்தான் காரணம். சம்பவத்தின்போது மிகவும் பனிமூட்டமாக இருந்தது. மின்சாரம் கிடையாது. கட்டிடங்களில் விளக்கு எரியவில்லை" என தெரிவித்தார்.

அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் ரஷியாவை உக்ரைன் தொடர்புபடுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம், நெஞ்சை நொறுக்கும் துயரம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


Next Story