மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; நள்ளிரவில் கட்சி தொண்டர்கள் இடையே கடும் மோதல், வீடு சூறையாடல்
மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கு இடையே நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.
மூர்ஷிதாபாத்,
மேற்கு வங்காளத்தில் ஜூலை 8-ந்தேதி (இன்று) ஒரே கட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவிப்பு வெளியிட்டார். இதனை தொடர்ந்து, தீவிர தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த பஞ்சாயத்து தேர்தல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. 2-வது இடம் பிடித்தது. அதற்கு முந்தின முறை கிடைத்த இடங்களை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
அரசியல் பரபரப்பான சூழலில், மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக வாக்கு சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் காலையில் இருந்தே வரிசையில் நின்று, வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந்தேதி நடைபெறும். இந்த நிலையில், பல இடங்களில் அரசியல் கட்சிகளிடையே மோதல் போக்கும் காணப்பட்டது. மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் சூழலில், நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மூர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஷாம்ஷெர்கஞ்ச் பகுதியில் இந்த மோதல் சம்பவம் நடந்தது. இதில் வீடு ஒன்று சூறையாடப்பட்டது.
இதனை தொடர்ந்து, உள்ளூர் காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்தது. அதற்கு முன்பு, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என தகவல் கிடைத்து, போலீசார் சென்று சோதனையில் ஈடுபட்டனர். எனினும் எதுவும் கண்டறியப்படவில்லை என காவல் உயரதிகாரி திபாகர் தாஸ் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் மூர்ஷிதாபாத் மாவட்டத்தின் கார்கிராம் நகரில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியது.
தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் கடந்த 1-ந்தேதி சுட்டு கொல்லப்பட்டார்.
இதேபோன்று, மால்டா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.