மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; தொண்டர்கள் படுகொலை என பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு


மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; தொண்டர்கள் படுகொலை என பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
x

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலில் தங்களது கட்சி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டத்தில் இன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டன.

இந்த தேர்தலில், 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். 22 ஜில்லா பரிஷத்துகளுக்கான 928 இடங்கள், பஞ்சாயத்து சமிதிகளுக்கான 9,730 இடங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கான 63,239 இடங்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலில் தங்களது கட்சி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

இதுபற்றி பா.ஜ.க. தலைவர் ராகுல் சின்ஹா கூறும்போது, தேர்தல் ஆணையம் மற்றும் அரசு இணைந்து ஒரு முடிவை எடுத்தன. இந்த தேர்தலை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சூறையாட கூடும். தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அது நடக்கும் என முடிவு செய்து இருந்தது. மத்திய படைகள் வந்தன. ஆனால், அவை வாக்கு சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இதுவரை 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அதில் ஒன்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த மோதலில் ஏற்பட்டது. அக்கட்சியினரால், பா.ஜ.க. மற்றும் பிற கட்சிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். தேர்தல் என்ற பெயரில் நாடகம் நடத்தப்படுகிறது. இதனை மக்களுக்கான தேர்தல் என நாம் அழைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதேபோன்று, கூச்பெஹார் பகுதியில் பாலிமரி கிராம பஞ்சாயத்து பகுதியில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் கூலிப்படையினர் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க.வின் தேர்தல் ஏஜண்டான மாதவ் விஷ்வாஸ் என்பவர் உயிரிழந்து உள்ளார்.

வேட்பாளர் படுகாயம் அடைந்து உள்ளார். அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பகுதியில் தேர்தல் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளது.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பிர்காச்சா பகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் ஏஜண்டான அப்துல்லா என்பவர் கொல்லப்பட்டு உள்ளார். இந்த தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னா பீபீயின் கணவரே காரணம் என கூறி அவரை கைது செய்ய வலியுறுத்தி கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், மேற்கு வங்காள மந்திரி ஷஷி பஞ்சா கூறும்போது, தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதல் அதிர்ச்சி மற்றும் பயங்கர சம்பவங்கள் நடந்து வருகின்றன. பா.ஜ.க., சி.பி.ஐ. (எம்) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து கொண்டு மத்திய படைகள் வேண்டும் என கூக்குரல் விடுத்தனர். படைகள் எங்கே குவிக்கப்பட்டு உள்ளன?

பொதுமக்களை பாதுகாக்க மத்திய படைகள் ஏன் தவறி விட்டன? திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 2 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

இதேபோன்று, அக்கட்சி இன்று காலை டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ரெஜிநகர், துபான்கஞ்ச் மற்றும் கார்கிராம் ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்கள் 3 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். 2 பேர் தொம்கொல் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்து உள்ளனர் என தெரிவித்து இருந்தது.


Next Story