மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல்: வன்முறையால் பாதிக்கப்பட்ட 697 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுபலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது
மேற்கு வங்காளத்தின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 8-ந்தேதி தேர்தல் நடந்தது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் வன்முறை பாதித்த 697 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது.
மேற்கு வங்காளத்தின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 8-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் பல இடங்களில் வன்முறை தலைவிரித்தாடியது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு என கட்சி பேதமின்றி அனைத்து கட்சி தொண்டர்களும் வன்முறை வெறியாட்டங்களில் இறங்கினர். இதில் பலத்த உயிர்ச்சேதங்களும், படுகாயமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்தன.
இந்த வன்முறை சம்பவங்களில் சிக்கி நேற்று முன்தினம் வரை 17 பேர் பலியாகி இருந்தனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் வேட்பாளர்களும் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
இந்த நிலையில் 8-ந்தேதி நிகழ்ந்த வன்முறையில் காயமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஒருவரின் மாமனார் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர்.
இதைப்போல நாடியா மாவட்டத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவரின் மைத்துனரின் அழுகிய உடல் சணல் வயலில் இருந்து நேற்று கண்ெடடுக்கப்பட்டது.
இதன்மூலம் உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து விட்டது.
முன்னதாக கடந்த 8-ந்தேதி நடந்த தேர்தலின்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட ஏராளமான தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.
வாக்குப்பெட்டிகளை சேதப்படுத்தியது, எரித்தது, தூக்கிச்சென்றது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றியது போன்ற வெறியாட்டம் நடந்த 697 வாக்குச்சாவடிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அந்த வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குறிப்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 துணை ராணுவப்படை வீரர் மூலம் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதனால் மக்கள் அச்சமின்றி வாக்களித்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. சில வாக்குச்சாவடிகளுக்கு காலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்றடைந்ததில் தாமதம் ஏற்பட்டிருந்தன. எனவே அந்த வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
நேற்றைய மறுவாக்குப்பதிவின் போது பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் இல்லை எனவும், ஒரு சில இடங்களில் மட்டும் நிகழ்ந்த சிறிய அளவிலான தகராறுகளை போலீசார் கட்டுப்படுத்தியதாகவும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
கடந்த 8-ந்தேதி மற்றும் நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கிடையே மறுவாக்குப்பதிவு நடத்துவதற்காக 6 ஆயிரம் வாக்குச்சாவடிகளின் பட்டியலை தேர்தல் கமிஷனுக்கு கொடுத்திருந்ததாகவும், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கேட்டுக்கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுதேர்தல் நடந்திருப்பதாகவும் பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்திருப்பதுடன், பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளே வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், இதில் திரிணாமுல் காங்கிரஸ்தான் அதிக பாதிப்பை சந்தித்திருப்பதாகவும் கூறியுள்ளது.