மம்தா பானர்ஜி பொய்களை பரப்புகிறார் - நிர்மலா சீதாராமன்


மம்தா பானர்ஜி பொய்களை பரப்புகிறார் - நிர்மலா சீதாராமன்
x

மம்தா பானர்ஜி பொய்களை பரப்புவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

9வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு மாநில முதல் - மந்திரிகள், யூனியன்பிரதேச கவர்னர்கள், மத்திய மந்திரிகள், நிதி ஆயோக் அமைப்பின் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆனால், மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டதாக கூறி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளும் மாநில முதல்-மந்திரிகள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர். அதேவேளை, மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார்.

ஆனால், கூட்டத்தில் பேசுவதற்கு போதிய நேரம் கொடுக்கப்படாமல் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி நிதி ஆயோக் கூட்டத்தில் பாதியிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார். கூட்டத்தில் இருந்து வெளியேறியபின் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, நான் கூட்டத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இக்கூட்டத்தை புறக்கணிக்கிறேன். கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு 20 நிமிடங்கள் பேசினார். அசாம், கோவா, சத்தீஷ்கார் முதல்-மந்திரிகள் 10 முதல் 12 நிமிடங்கள் வரை பேசினர். ஆனால், நான் பேச 5 நிமிடம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. பின்னர் எனது மைக் அணைக்கப்படது. இது ஒருதலைப்பட்சமானது. எதிர்க்கட்சி கூட்டணியில் இடம்பெற்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் ஒரே முதல்-மந்திரி நான் மட்டும்தான். கூட்டாட்சி தத்துவம் வலிமைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இக்கூட்டத்தில் பங்கேற்றேன்' என்றார்.

இந்நிலையில், மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பொய்களை பரப்புவதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மம்தா பானர்ஜி அவருக்கு ஒதுக்கப்பட்ட முழுமையான நேரத்திலும் பேசினார். எங்கள் மேஜைக்கு முன்னாள் இருந்த திரையில் அவர் பேசிய நேரம் காட்டிக்கொண்டிருந்தது. சில மாநில முதல்-மந்திரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பேசினர். எந்தவித பிரச்சினையும் இன்றி சில முதல்-மந்திரிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. பேசும்போது யாருக்கும் மைக் ஆப் செய்யப்படவில்லை. குறிப்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரியின் மைக் ஆப் செய்யப்படவில்லை. மம்தா பானர்ஜி பொய்களை பரப்புகிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றது எனக்கு மகிழ்ச்சி. வங்காளத்திற்காகவும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்காகவும் கூட்டத்தில் பேசுவதாக மம்தா கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். அவர் பேசுவதை நான் ஏற்கலாம் அல்லது ஏற்க மறுக்கலாம். ஆனால், தற்போது கூட்டத்திற்கு வெளியே மம்தா ஆதாரமற்ற விஷயங்களை பேசும்போது, இந்தியா கூட்டணியினர் மகிழ்ச்சியடைய வைக்க அவர் முயற்சி செய்கிறார் என்றுதான் நான் முடிவுக்கு வருகிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story