மேற்கு வங்காளம்: கட்சி தொண்டர்கள் 2 பேர் மீது துப்பாக்கி சூடு; பா.ஜ.க. குற்றச்சாட்டு


மேற்கு வங்காளம்:  கட்சி தொண்டர்கள் 2 பேர் மீது துப்பாக்கி சூடு; பா.ஜ.க. குற்றச்சாட்டு
x

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பட்பாரா பகுதியில், எங்களுடைய தொண்டர்கள் 2 பேரை சுட்டு விட்டனர் என பா.ஜ.க. குற்றச்சாட்டாக கூறியுள்ளது.

பராசத்,

மேற்கு வங்காளத்தில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. கொல்கத்தா நகரில் உள்ள பிரெசிடென்சி சிறையில் வி.ஐ.பி. வார்டில் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், சத்ர சமாஜ் என்ற புதிதாக உருவாக்கப்பட்ட மாணவர் அமைப்பு, நபன்னா அபியான் என்ற பெயரில் அரசை கண்டித்து பேரணியாக செல்ல முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தியது. இதன்படி, நேற்று இந்த பேரணி நடத்தப்பட்டது.

இதில் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தலைமை செயலகம் நோக்கி செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த தடுப்பான்களை தாக்க முற்பட்டனர். இதேபோன்று பாதுகாப்பு படையினரை நோக்கி கற்கள் மற்றும் செங்கற்களை வீசியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைந்து போக செய்தனர். ஹவுரா பாலம், சான்டிராகாச்சி ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் சிலரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்த சூழலில் போலீசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்காளத்தில் 12 மணிநேர பந்திற்கு பா.ஜ.க. இன்று அழைப்பு விடுத்தது. இதன்படி, பஸ்கள் மறிக்கப்பட்டன. ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் குறுக்கே நின்றும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பகுதியளவு பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சியான பா.ஜ.க. இன்று வெளியிட்ட செய்தியில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பட்பாரா பகுதியில், எங்களுடைய தொண்டர்கள் 2 பேரை சுட்டு விட்டனர் என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி. அர்ஜுன் சிங் கூறும்போது, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ரவுடிகள் சிலர் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர் என கூறியுள்ளார். ஆனால், ஆளுங்கட்சி இதனை மறுத்துள்ளது.

ஆனால் போலீசாரோ, ஆங்கிலோ-இந்தியா சணல் மில்லுக்கு வெளியே சிலர், அந்த 2 பேரையும் அடித்து உதைத்துள்ளனர் என தெரிவித்தனர். இதில் காயமடைந்த அவர்கள் இருவரும் பட்பாரா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.


Next Story