ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட பகுதியில் 99% இடங்களில் நமக்கு வெற்றி: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொண்ட பகுதியில் 99% இடங்களில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம் என மல்லிகார்ஜூன கார்கே பேசியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதில், மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே. சிவக்குமார், வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கார்கே பேசும்போது, இது ஒரு பெரிய வெற்றி. இதனால், ஒட்டு மொத்த தேசத்திலும் ஒரு புதிய ஆற்றல் வெளிப்பட்டு உள்ளது. பா.ஜ.க. எப்போதும் நம்மை ஆத்திரமூட்டும் வகையில் பேசி, நாட்டில் காங்கிரசுக்கு முக்தி அளிப்போம் என கூறுவது வழக்கம்.
ஆனால், உண்மை என்னவென்றால், தென் இந்தியாவில் பா.ஜ.க.வுக்கு முக்தி அளிக்கப்பட்டு உள்ளது. ஈகோ நீண்ட காலத்திற்கு நிலைக்காது. ஜனநாயகத்தில், மக்கள் கூறுவனவற்றை கவனித்து, நமக்கு சரியான பாதையை காட்டிய அவர்கள் முன் தலை வணங்க வேண்டும்.
இது எந்தவொரு நபரின் வெற்றி அல்ல. இது மாநில மக்களின் வெற்றி. அவர்கள் முடிவு செய்து, தேர்ந்தெடுத்து உள்ளனர். அதனாலேயே, 36 ஆண்டுகளுக்கு பின்னர் 136 இடங்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என பேசியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, கர்நாடகாவில் நாம் மேகதாது பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினோம். அதன்பின்பு, இந்திய ஒற்றுமை பாதயாத்திரையானது கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபெற்றது.
ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையில் அவர் நடந்து சென்ற பகுதியில், ஏறக்குறைய 99% இடங்களில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என மல்லிகார்ஜூன கார்கே பேசியுள்ளார்.