நைஸ் நிறுவனத்திடம் கூடுதலாக உள்ள 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உயிரை கொடுத்தாவது மீட்போம் - குமாரசாமி பேச்சு


நைஸ் நிறுவனத்திடம் கூடுதலாக உள்ள 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உயிரை கொடுத்தாவது மீட்போம் - குமாரசாமி பேச்சு
x

நைஸ் நிறுவனத்திடம் கூடுதலாக உள்ள 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உயிரை கொடுத்தாவது மீட்போம் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு:

நைஸ் ரோடு திட்டத்திற்கு நிலத்தை இழந்த விவசாயிகள் போராட்ட குழு வட்ட மேசை மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

நைஸ் ரோடு திட்டத்தால் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு நான் எப்போதும் ஆதரவு அளிக்கிறேன். விவசாயிகளின் போராட்டம் கட்சி சார்பு இன்றி நடைபெற வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 11 ஆயிரம் ஏக்கர் நிலம் அந்த நிறுவனத்திடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு மீட்டு விவசாயிகளுக்கு ஒப்படைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் மேற்கு வங்காளத்தில் சிங்குரில் நடைபெற்ற போராட்டத்தை போல் இங்கும் போராட்டம் நடத்துவோம். அந்த நிறுவனத்திடம் உள்ள கூடுதல் நிலத்தை திரும்ப பெற எந்த சட்ட சிக்கலும் இல்லை. அந்த திட்டத்தை வாபஸ் பெற சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை. அந்த நிறுவனம் அரசுக்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது.

அந்த நிறுவனம் செய்த முறைகேடுகள் என்ன என்பது மக்களுக்கு தெரியும். அதனால் நைஸ் ரோடு திட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது இதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. காவிரி விவகாரம் முடிவடைந்த பிறகு இந்த போராட்டத்தை தொடங்கலாம். நைஸ் நிறுவனத்திடம் கூடுதலாக உள்ள 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உயிரை கொடுத்தாவது மீட்போம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story