பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை நிறுத்த மாட்டோம்- மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி
பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை நிறுத்த மாட்டோம் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை நிறுத்த மாட்டோம் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிறிது காலம் தேவை
பெங்களூருவில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை எக்காரணம் கொண்டும் நிறுத்த மாட்டோம். தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும். அடையாளம் காணப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்துவிட்டோம். புதிதாக ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண்பதற்காக நில அளவீட்டு பணிகளை வருவாய்த்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்.அதனால் ஆக்கிரமிப்புகளை மீண்டும் அகற்ற சிறிது காலம் தேவைப்படுகிறது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் தற்போதைக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்றுகிறோம். கால்வாய் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கட்டிடங்களை இடிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் சட்டப்படி செயல்படுவோம்.
முடிவு எடுக்க முடியாது
வரும் நாட்களில் கால்வாய் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் சாலையை மூடுவது குறித்து மாநகராட்சி முடிவு எடுக்க முடியாது. போக்குவரத்து போலீசார் கூறிய இடத்தில் நாங்கள் வேகத்தடைகளை அமைத்துள்ளோம்.
இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.