மராட்டியத்திற்கு ஒரு அங்குல நிலம் கூட விட்டு கொடுக்க மாட்டோம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவேசம்


மராட்டியத்திற்கு ஒரு அங்குல நிலம் கூட விட்டு கொடுக்க மாட்டோம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவேசம்
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

எல்லை பிரச்சினையில் மராட்டியத்திற்கு ஒரு அங்குல நிலம் கூட விட்டு கொடுக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

எல்லை பிரச்சினை

கர்நாடகம்-மராட்டியம் இடையே பெலகாவி விஷயத்தில் எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. பெலகாவியை அம்மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த எல்லை பிரச்சினை இரு மாநிலங்கள் இடையே மீண்டும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மராட்டியத்திற்கு ஒரு அங்குல நிலம் கூட விட்டு கொடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக-மராட்டிய எல்லை விவகாரத்தில் அம்மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், மக்களை தூண்டிவிடும் வகையில் கருத்துகளை கூறியுள்ளார். அதாவது பெலகாவி பகுதியை மராட்டியத்தில் சேர்ப்பதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கனவு ஒருபோதும் நனவாகாது. கர்நாடகத்தின் நிலம், நீர், எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது.

வெற்றி பெறவில்லை

எல்லை பகுதியில் ஒரு அங்குல நிலம் கூட மராட்டியத்திற்கு விட்டு கொடுக்க மாட்டோம். மேலும் மராட்டியத்தில் உள்ள சோலாப்பூர், அக்கலகோட்டை பகுதியில் கன்னடர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அந்த பகுதிகளை கர்நாடகத்தில் சேர்க்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம் ஆகும்.

மராட்டிய மாநிலம் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இரு மாநில எல்லையில் பிரச்சினை கிளப்பி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த விஷயத்தில் அம்மாநிலம் இதுவரை வெற்றி பெறவில்லை. இனியும் வெற்றி பெறாது. நாங்கள் எங்களின் சட்ட போராட்டத்தை தீவிரமாக மேற்கொள்ள தயாராகியுள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.


Next Story