கர்நாடகத்தில் வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் ஆட்சி அமைப்போம்


கர்நாடகத்தில் வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் ஆட்சி அமைப்போம்
x

கர்நாடகத்தில் வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பயப்பட மாட்டார்கள்

பா.ஜனதாவினர் மக்களை மிரட்டி ஓட்டு வாங்க முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்காவிட்டால், திட்டங்களை ஒதுக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். இந்த நாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் 41 சதவீதம் கர்நாடகத்தில் இருந்து செல்கிறது. இதில் நமக்கு மீண்டும் கிடைப்பது சொற்ப அளவில் தான்.

பா.ஜனதாவினரின் மிரட்டலுக்கு கன்னடர்கள் பயப்பட மாட்டார்கள். இது கர்நாடகத்தின் சுயமரியாதையை காக்க நடைபெறும் தேர்தல். மேகதாது திட்டத்திற்கு இந்த பா.ஜனதா அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது. இந்த திட்டத்திற்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அனைத்து அனுமதிகளையும் பெற்று கொடுத்திருக்க வேண்டும். அந்த வேலையை அவர் செய்யவில்லை.

15-ந் தேதி ஆட்சி

மகதாயி திட்ட பணிகளை இன்னும் தொடங்காமல் இருப்பது ஏன்?. மத்திய அரசுக்கு கர்நாடகம் தான் வருவாய் கொடுத்து உதவுகிறது. காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களின் இலக்கு. அந்த இலக்கை நாங்கள் உறுதியாக எட்டுவோம். வருகிற 13-ந் தேதி நீங்கள் தேர்தல் முடிவை பாருங்கள். வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் ஆட்சி அமைப்போம். பா.ஜனதா குறித்து அவதூறாக வெளியான விளம்பரத்திற்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டிசு அனுப்பியது.

அந்த நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளேன். இங்குள்ள பா.ஜனதாவினர் சரியான முறையில் ஆட்சி நடத்த முடியாமல், பாவம் பிரதமர் மோடியை வீதி வீதியாக அலைய விட்டனர்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story