நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் - சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல்


நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் - சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல்
x

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா அவசர ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலை மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. குறிப்பாக ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களான பிஏ.2, பிஏ.2.38 ஆகியவைதான் இந்த எழுச்சியின் பின்னால் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தற்போது மராட்டியம், கேரளா, டெல்லி, கர்நாடகம், தமிழ்நாடு, அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, இன்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பேசியதாவது:-

நாடு முழுவதும் இருக்கும் முதியவர்கள், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். கடந்த 2 வாரங்களில் நாட்டின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு, டெல்லி, மராட்டியம், கேரளா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும், சுவாச பிரச்சினை இருக்கும் கொரோனா நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். முதல் இரண்டு தவணைகளுடன், தேவைப்படும் மாவட்டங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story