பா.ஜனதாவுக்கு எதிராக போராட தயாராகுங்கள்- நாம் போலி தேசபக்தர்களின் வாயை மூட வேண்டும்; காங்கிரசாருக்கு சித்தராமையா வேண்டுகோள்


பா.ஜனதாவுக்கு எதிராக போராட தயாராகுங்கள்- நாம் போலி தேசபக்தர்களின் வாயை மூட வேண்டும்; காங்கிரசாருக்கு சித்தராமையா வேண்டுகோள்
x

நாம் போலி தேசபக்தர்களின் வாயை மூட வேண்டும் என்று காங்கிரசாருக்கு சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு:

வெள்ளையனே வெளியேறு போராட்டம்

கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சி பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-

1942-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் மகாத்மா காந்தி, வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டார். அதேநாள் செய் அல்லது செத்துமடி என்றும் சுதந்திர போராட்டக்காரர்களுக்கு காந்தி வேண்டுகோள் விடுத்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டம் 1942-ம் ஆண்டு 9-ந் தேதி நடைபெற்றது.

சிறைக்கு செல்லவில்லை

அப்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களை ஆங்கிலேயே போலீசார் கைது செய்தனர். ஆர்.எஸ்.எஸ். 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் சுதந்திரத்திற்காக நடைபெற்ற எந்த போராட்டத்திலும் அந்த அமைப்பினர் பங்கேற்று சிறைக்கு செல்லவில்லை.

இப்போது பா.ஜனதாவினர் ஹர் கர் திரங்கா இயக்கத்தை நடத்துகிறார்கள். இந்திய தேசிய கொடியை, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எதிர்த்தனர்.

53 ஆண்டுகள் காலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றவில்லை. இளைஞர்கள் 2 பேர் அங்கு சென்று கலாட்டா செய்ததை அடுத்து தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். சாதிகள் இல்லாமல் இருந்திருத்தால் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருந்திருக்காது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சூத்திரர்கள் மற்றும் பெண்களுக்கு கல்வி கிடைக்கவில்லை.

போலி தேசபக்தர்கள்

பசவண்ணர் வந்த பிறகு கர்நாடகத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்க தொடங்கியது. தேசிய கொடியை எதிர்ப்பவர்களிடம் தேசபக்தி இருக்குமா?. நாட்டிற்கு சுதந்திரம் காங்கிரஸ் கட்சியால் கிடைத்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஏராளமானவர்கள் சுதந்திரத்திற்காக உயர்த்தியாகம் மற்றும் பொருட்தியாகம் செய்தனர். ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவினர் நமக்கு தேபசக்தி குறித்து பாடம் நடத்துகிறார்கள்.

நாம் இன்று போலி தேபசக்தர்களின் வாயை மூட வேண்டும். பா.ஜனதாவினருக்கு ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீது கவுரவம் இல்லை. இத்தகையவர்கள் தான் இன்று நமது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதாவுக்கு நாம் அனைவரும் போராட தயாராக வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய நேரு 11 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

பாதயாத்திரை

நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆவதையொட்டி வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. பெங்களூருவில் நடைபெறும் பாதயாத்திரையில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். வருகிற 31-ந் தேதி வரை பல்வேறு பகுதிகளில் இத்தகைய பாதயாத்திரை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story