8 ஆண்டுகளில் சுகாதார துறையில் நிறைய பணிகள் செய்துள்ளோம்: பிரதமர் மோடி


8 ஆண்டுகளில் சுகாதார துறையில் நிறைய பணிகள் செய்துள்ளோம்:  பிரதமர் மோடி
x

சுகாதார துறையில் முந்தைய 70 ஆண்டுகளில் செய்யப்பட்டதை விட கடந்த 8 ஆண்டுகளில் நிறைய பணிகள் செய்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

மொகாலி,

பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். மொகாலியில், முல்லன்பூர் என்ற இடத்தில் கட்டப்பட்ட ஹோமி பாபா புற்றுநோய் ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அவர் திறந்து வைத்தார்.

மத்திய அணு ஆராய்ச்சி துறையின் நிதி உதவி பெறும் டாடா மெமோரியல் சென்டரால் ரூ.660 கோடி செலவில் இந்த ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. 300 படுக்கைகள் கொண்டதாக, நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

வரும்முன் காப்பதே சிறந்தது. நல்ல ஆஸ்பத்திரி என்பது 4 சுவர்களை கொண்டது மட்டுமல்ல. கடந்த 8 ஆண்டுகளாக, சுகாதாரம்தான் அரசின் முன்னுரிமையாக உள்ளது.

சுகாதார துறையில், முந்தைய 70 ஆண்டுகளில் செய்யப்பட்டதை விட கடந்த 8 ஆண்டுகளில் நிறைய பணிகள் செய்துள்ளோம். ஒன்றரை லட்சம் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மையங்கள் செயல்பட தொடங்கி விட்டன.

புற்றுநோயை பார்த்து நாம் பயப்படக்கூடாது, எதிர்த்து போராட வேண்டும். ஏராளமானோர் புற்றுநோயை வென்றிருப்பதை நான் அறிவேன்.

இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக வேண்டுமானால், சுகாதார வசதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும். நவீன ஆஸ்பத்திரிகள் கிடைத்தால், மக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று அவர் பேசினார்.

பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-மந்திரி பகவந்த் மான், மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னதாக, அரியானா மாநிலம் பரிதாபாத்தில் 2 ஆயிரத்து 600 படுக்கை வசதிகள் கொண்ட அமிர்தா ஆஸ்பத்திரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


Next Story