நடந்தது என்ன? - வயநாடு நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பியவர்களின் பகீர் அனுபவம்


நடந்தது என்ன? - வயநாடு நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பியவர்களின் பகீர் அனுபவம்
x

வயநாடு நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பியவர்கள் கூறிய பகீர் அனுபவத்தை காண்போம்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக மலைப்பகுதியில் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணிவரை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழை, நிலச்சரிவுடன் சாளியாற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 கிராமங்கள் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தன. மேலும், இரவு, அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

நிலச்சரிவில் முண்டக்கை , சூரல்மலையை இணைக்கும் பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து நேற்று காலை முதல் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், பல்வேறு மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 163 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி மற்றும் மீட்புப்பணி தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பியவர்கள் கூறிய பகீர் அனுபவத்தை காண்போம். நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய முண்டக்கை பகுதியை சேர்ந்த பிரன்ஜேஷ் கூறியதாவது,

(ஜூலை 30) நள்ளிரவு 12.40 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. எங்களுக்கு மிகப்பெரிய சத்தம் கேட்டது. என் வீட்டின் முன் நடந்த நிலச்சரிவில் எனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை இழந்துவிட்டோம். எங்கள் குடும்பத்தில் மொத்தம் 8 பேர். எனது தாயாரின் சகோதரி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்' என்றார்.

நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய சூரல்மலை பகுதியை சேர்ந்த பிரசன்னா (பெண் - வயது 40) கூறியதாவது, சேறு நிறைந்த வெள்ளம் எனது சகோதரியையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் என் கண்முன்னே அடித்து சென்றதை கண்டேன். நான் எனது தந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அவரை தூக்கிக்கொண்டு வனப்பகுதியை நோக்கி ஓடினேன். எனது சகோதரிக்கு என்னால் உதவ முடியவில்லை. அவரை என்னால் காப்பாற்ற முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்த 2 குழந்தைகள் அடித்து செல்லப்பட்டனர். காட்டாற்று வெள்ளம் , நிலச்சரிவில் அடித்து செல்லும்போது அவர்கள் அலறிய சத்தம் எனக்கு கேட்டது. எங்கள் வீடு அடித்து செல்லப்பட்டது' என்றார்.

நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய சூரல்மலை பகுதியை சேர்ந்த பத்மாவதி (வயது 80) கூறியதாவது,

நிலச்சரிவில் எனது மருமகளை நான் இழந்துவிட்டேன். இனி என்னை யார் கவனிப்பார்கள். நான் தனியாக வாழ வேண்டும்' என்றார்.


Next Story