வயநாடு நிலச்சரிவு: 8-வது நாளாக தொடரும் மீட்புப் பணி


வயநாடு நிலச்சரிவு: 8-வது நாளாக தொடரும் மீட்புப் பணி
x

வயநாடு பயங்கர நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 405 ஆக உயர்ந்தது.

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி, அதன் அருகே இருந்த அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. நிலச்சரிவின் கோரதாண்டவத்தால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் கிராம மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போனார்கள்.

நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மண்ணில் புதைந்தவர்கள், காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று 8-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நவீன கருவியான ரேடார் சிக்னல் அடிப்படையில் மண்ணில் புதைந்தவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கி யாரேனும் உள்ளார்களா என தேடப்பட்டு வருகிறது. உடல்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள பகுதிகளில் நவீன கருவிகளுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 180 பேரை காணவில்லை. சூரல்மலை கிராமம் மற்றும் முண்டக்கை, அட்டமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர அங்குள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளில் தங்கி இருந்தனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. சாலியாற்றில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை பொது மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி சர்வமத பிரார்த்தனையுடன் ஒரே இடத்தில் 39 பேரின் உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

நிலச்சரிவு காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.


Next Story