வயநாடு நிலச்சரிவு; தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்-பினராயி விஜயன்


வயநாடு நிலச்சரிவு; தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்-பினராயி விஜயன்
x

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சூழ்நிலை சரியில்லாததால், உதவ முன்வருவோர் நேரடியாக வயநாடு வர வேண்டாம் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

திருவனந்தபுரம்,

நிலச்சரிவு பகுதிகளில் நடக்கும் மீட்பு பணிகள் தொடர்பாக திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.இந்தக் கூட்டத்திற்கு பிறகு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். முண்டக்கை பகுதியில் உயிருடன் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர். மாயமானவர்களை மட்டும் தேடி வருகிறோம். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள், சிறார்கள், உறவினர்களை இழந்தவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்படும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு முகாம்களில் இருக்கக்கூடும். முகாம்களில் இருப்பவர்கள், தங்களது குடும்பத்தினரை காணவில்லை என தேடிப்போக வேண்டாம். பட்டியல் தாருங்கள். நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம். சூழ்நிலை சரியில்லாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருவோர் நேரடியாக வயநாடு வர வேண்டாம். இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story