வயநாடு நிலச்சரிவு: 2 பள்ளிகளில் படித்த மாணவர்களில் 27 பேர் பலி; 23 பேர் மாயம்


வயநாடு நிலச்சரிவு: 2 பள்ளிகளில் படித்த மாணவர்களில் 27 பேர் பலி; 23 பேர் மாயம்
x

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இரு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, கல்வி துறை அதிகாரிகள் கூட்டம் ஒன்றை இன்று (வெள்ளி கிழமை) நடத்த உள்ளனர்.

வயநாடு,

கேரளாவின் வயநாட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலர் சிக்கினர். இந்த பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 296 ஆக உயர்வடைந்து உள்ளது.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வயநாட்டில் முண்டக்கை கிராமத்தில் மற்றும் சூரல்மலா கிராமத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் பலியானார்கள். 23 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

வயநாட்டில் முண்டக்கை கிராமத்தில் உள்ள அரசு முதன்மை பள்ளி மற்றும் சூரல்மலா கிராமத்தில் உள்ள வெள்ளர்மலா பகுதியில் அரசு மேனிலை பள்ளி ஒன்றும் நிலச்சரிவால் கடுமையாக சேதமடைந்தன. இதில், சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 32 பேரும், முண்டக்கை பள்ளியில் படித்து வந்த 18 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இரு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, கல்வி துறை அதிகாரிகள் கூட்டம் ஒன்றை இன்று (வெள்ளி கிழமை) நடத்த உள்ளனர். இதில், உயிர் தப்பிய மற்றும் மீட்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் கவுன்சிலிங் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Next Story