மராட்டியம்: மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கியுடன் புகுந்த பயங்கரவாதிகள்...?; கன்னத்தில் 'பளார்' என அறை விட்ட நபர் - நடந்தது என்ன?


மராட்டியம்: மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கியுடன் புகுந்த பயங்கரவாதிகள்...?; கன்னத்தில் பளார் என அறை விட்ட நபர் - நடந்தது என்ன?
x
தினத்தந்தி 9 Aug 2023 2:36 AM GMT (Updated: 9 Aug 2023 7:24 AM GMT)

மராட்டியத்தில் மத வழிபாட்டு தலத்திற்குள் துப்பாக்கியுடன் இருவர் நுழைந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் துஹ்லி மாவட்டத்தில் இந்துமத வழிபாட்டுத்தலமான சுவாமிநாராயண் கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று பக்தர்கள் சாமிதரிசனம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, மத வழிபாட்டு தலத்திற்குள் முகமூடி அணிந்து துப்பாக்கியுடன் வந்த இருவர் அங்கிருந்த நபரை பிணைகைதியாக பிடித்தனர். துப்பாக்கியேந்திய இருவரும் பயங்கரவாதியாக இருக்கலாம் என அச்சம் எழுந்ததால் மத வழிபாட்டு தலத்திற்கு வந்தவர்கள் அலறியடித்து ஓடினர். மேலும், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அப்போது, மத வழிபாட்டு தலத்திற்கு வந்திருந்த ஒருவர் தைரியமாக துப்பாக்கியேந்திய நபர் அருகே சென்று அவரது கன்னத்தில் பளார் என அறைவிட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கு போலீசார் விரைந்த நிலையில் முகமூடி அணிந்து துப்பாக்கியுடன் பயங்கரவாதி போல் இருந்தது 'போலீஸ்காரர்' என தெரியவந்தது. மேலும், சம்பவம் முழுவதும் பயங்கரவாத தடுப்பு தொடர்பான 'போலீஸ் பயிற்சி (Police Drill)' என்பது தெரியவந்தது.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான பயிற்சிக்காக போலீசார் துப்பாக்கியுடன் பயங்கரவாதி போல் மாறுவேடத்தில் மதவழிபாட்டுத்தலத்திற்குள் நுழைந்தனர் என்பது தெரியவந்துள்ளது. பிணைக்கைதியாக இருந்தவரும் போலீஸ்காரர் ஆவார்.

இந்த சம்பவத்தில் பயங்கரவாதி வேடமணிந்த போலீஸ்காரர் கன்னத்தில் பளார் என அறைவிட்ட நபர் வழிபாட்டு தலத்திற்கு வந்த பக்தர் என்பதும் அவர் பெயர் பிரஷாந்த் குல்கர்னி (வயது 35) என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதேவேளை, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை பயிற்சியாக இருந்தாலும் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள், குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதை போலீசார் தவிர்க்குமாறு சமூகவலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story