உலகம் முழுவதும் சென்று இந்திய தேசிய கொடியை ஏற்றி பெருமைப்படுத்தி வரும் போர் கப்பல்கள்
இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் ஆஸ்திரேலியா, பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று தேசிய கொடியை ஏற்றியுள்ளன.
புதுடெல்லி,
நாடு முழுவதும் ஓராண்டுக்கு, இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்கிலாந்திடம் இருந்து இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்களை நினைவுகூரும் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் கப்பல்கள் 6 கண்டங்கள், 3 பெருங்கடல்கள் மற்றும் 6 வெவ்வேறு நேர மண்டலங்களுக்கு பயணிக்கின்றன.
இதன்படி, இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். சாத்புரா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டீகோ நகரில் உள்ள துறைமுகத்திற்கு சென்றுள்ளது. துறைமுகத்தில் இருந்து 10 ஆயிரம் கடல் மைல்கள் தொலைவில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் தேசிய கொடியும் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே உருவான இந்த போர்க்கப்பல் ஆனது, இந்திய சுதந்திர தினத்தில் 75 முறை சுற்றி வருகிறது. இந்திய விடுதலை போராட்ட தியாகிகள் 75 பேர், நாட்டுக்கு செய்த தியாகத்தின் நினைவாக, ஒவ்வொரு சுற்றும் ஒருவருக்கு என்ற முறையில் அர்ப்பணிக்கப்படுகிறது.
இதுபற்றிய அறிவிப்பில், வடஅமெரிக்காவின் மேற்கு கடலோர பகுதிக்கு இந்திய போர்க்கப்பல் சென்றடைவது இதுவே முதன்முறையாகும். அதனால், ஐ.என்.எஸ். சாத்புராவின், சான் டீகோ நகர பயணம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த பயணம், உலகம் முழுவதும் இந்திய கடற்படையை நிலைநிறுத்தும் திறனை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்து உள்ளது.
ஐ.என்.எஸ். சாத்புரா போர்க்கப்பல் 6 ஆயிரம் டன் எடையுடன், வான், தரையின் மேற்பரப்பு மற்றும் நீரின் அடியில் என எதிரிகளை கண்டறிந்து, தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இந்திய போர் கப்பல்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதுடன், பார்வையாளர்கள் சென்று அதனை கண்டு களிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்திய போர் கப்பலான ஐ.என்.எஸ். டார்காஷ், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு சென்றுள்ளது.
கேப்டன் சாமுவேல் ஆபிரகாம் தலைமையில் சென்றுள்ள இந்த கப்பலில் பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற பாடல்களை இந்திய கடற்படை இசைத்து மகிழ்வித்தது.
இதேபோன்று கேப்டன் எஸ்.கே. சிங் தலைமையில் ஐ.என்.எஸ். தபார், ஆப்பிரிக்காவின் மொம்பசா நகருக்கும், ஐ.என்.எஸ். தரங்கிணி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கும், கேப்டன் எஸ்.எஸ். ரந்தவா தலைமையில் ஐ.என்.எஸ். சென்னை, ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கும், ஐ.என்.எஸ். சுமேதா ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகருக்கும் சென்று தேசிய கொடியை ஏற்றி உள்ளன.