வாக்காளர்களை மிரட்டும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை; மாநகராட்சி தலைமை கமிஷனர் எச்சரிக்கை
வாக்காளர்களை மிரட்டும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
வாக்காளர்களை மிரட்டும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேட்டி
பெங்களூரு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி தலைமை கமிஷனருமான துஷார் கிரிநாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூருவில் தற்போதைய நிலவரப்படி 52 சதவீத வாக்குப்பதிவு உறுதியாகி உள்ளது. அதை 75 சதவீதமாக உயர்த்துவதற்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக மக்களிடையே பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது ஆகும். தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் குறித்து ஆதாரத்துடன் சிவிஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம். அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவுடிகள் மீது நடவடிக்கை
தேர்தலின் போது குறிப்பிட்ட கட்சிகளுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என ரவுடிகள் யாரும் பொதுமக்களை அச்சுறுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவில் உள்ள பதற்றமாக வாக்குச்சாவடிகளை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் கொண்டுள்ளனர்.
தேர்தல் அன்று அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான பணிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருவில் சில இடங்களில் சாலை பள்ளங்கள் உள்ளன. அவற்றை மூடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அனைத்தையும் அதிகாரிகள் மூடிவிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.