சிறுபான்மை மக்களை குறிவைத்து வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது: கனிமொழி
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்த பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த மசோதா தாக்கல் செய்த பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்போது திமுக எம்பி கனிமொழி கூறியதாவது,
"வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்த இன்று மிகவும் சோகமான நாள். மத சுதந்திரத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தலையிடுகிறது. இந்த மசோதா மனித உரிமைக்கு எதிரானது. அரசியல் அமைப்பு மட்டுமின்றி கூட்டாட்சி முறைக்கும் இது எதிரானது. நாட்டு மக்கள் இடையே பிரிவை ஏற்படுத்தும் முயற்சி இதுவாகும். குறிப்பிட்ட மதம், சமுதாயத்தினரை குறி வைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரான மசோதா. சிறுபான்மை மக்களை குறிவைத்து வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.