அரசு பள்ளியில் 9 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்


அரசு பள்ளியில் 9 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாகர் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தனர்.

சிவமொக்கா:-

மதிய உணவு

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா கோட்டை கொப்பா பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு பள்ளி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் 9 பேர் சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டது.

ஒரு சிலருக்கு வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சில மாணவர்கள் வீடு திரும்பினர். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து வாந்தி, மயக்கத்திற்கு ஆளாகினர்.

அவர்களை பரிசோதனை செய்ததில் சாப்பிட்ட உணவு கெட்டுப்போய் இருந்தது தெரிந்தது. எனினும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் கூறினர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோட்டை போலீசார் வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் பள்ளியில் உணவு தயாரிக்க வழக்கமாக ஒரு கிணற்றில் தண்ணீர் எடுப்பதும், நேற்று கிராமத்தில் உள்ள வேறு ஒரு கிணற்றில் தண்ணீர் எடுத்ததும் தெரிந்தது.

பள்ளிக்கு அறிவுரை

இதையடுத்து அந்த கிணற்று நீரை சேகரித்து ஆய்வுக்கு சுகாதார துறை அதிகாரிகள் அனுப்பினர். தகவல் அறிந்து மாவட்ட கல்விதுறை அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் டாக்டரில் மாணவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் உணவு தயாரிக்கும்போது கவனமாகவும், சுத்தமான குடிநீரை பயன்படுத்துமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்திவிட்டு சென்றனர். பள்ளி மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால்

அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story