அசுத்த நீரை குடித்த 30 பேருக்கு வாந்தி-மயக்கம்


அசுத்த நீரை குடித்த 30 பேருக்கு வாந்தி-மயக்கம்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாகர் அருகே அசுத்த நீரை குடித்த 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவமொக்கா:-

வாந்தி மயக்கம்

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆனந்த்புரா பகுதியில் கடந்த சில வாரங்களாக அசுத்த குடிநீர் வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதுகுறித்து அவர்கள் பஞ்சாயத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர். ஆனால் பஞ்சாயத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனந்த்புரா கிராமத்தில் வழக்கம்போல கிராம பஞ்சாயத்து சார்பில் குடிநீர் விடப்பட்டது.

இந்த நீரை அந்த பகுதி மக்கள் குடித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சாகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் குறித்து சாகர் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்ற போலீசார் டாக்டரிடம் விசாரித்தனர்.

தூய்மையான குடிநீர் வழங்கவேண்டும்

அப்போது அசுத்த நீரை குடித்ததால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இருப்பினும் உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறினர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை அனைவரும் சிகிச்சை

பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதுடன், தூய்மையான குடிநீர் வழங்கும்படி கூறியுள்ளனர். மேலும் பொதுமக்கள் தரப்பிலும் தூய்மையான குடிநீர் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்ற கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story