விசா முறைகேடு வழக்கு: பாஸ்கரராமனின் ஜாமீன் மனு 6-ந்தேதிக்கு தள்ளிவைப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு
விசா முறைகேடு வழக்கில், பாஸ்கரராமனின் ஜாமீன் மனுவை 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
விசா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஆடிட்டர் பாஸ்கரராமன் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.கே.நாக்பால் அமர்வு முன் நேற்று நடைபெற்றது. அப்போது, பாஸ்கரராமன் சார்பில் ஆஜரான வக்கீல் திரீதீப் பயஸ், 'மத்திய உள்துறை மந்திரி, செயலாளரின் அனுமதியில்லாமல் விசா வழங்க முடியாது' என வாதிட்டார். மேலும், ஐ.என்.எக்ஸ், ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு பாஸ்கரராமன் ஒத்துழைத்து வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து இந்த மனு மீது சி.பி.ஐ. தரப்பு வாதங்களை முன்வைக்கும் வகையில், விசாரணையை வருகிற 6-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
பாஸ்கரராமனுக்கு விதிக்கப்பட்ட சி.பி.ஐ. காவல் வருகிற 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.