கார்த்தி சிதம்பரம் மீதான விசா முறைகேடு வழக்கு: முன்ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை
கார்த்தி சிதம்பரம் மீதான விசா முறைகேடு வழக்கு தொடர்பான முன்ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி,
விசா முறைகேடு தொடர்பான புகாரில் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.
இந்த மனுவை நீதிபதி பூனம் ஏ.பாம்பா கடந்த 8-ந் தேதி விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க வழக்கை கடந்த சனிக்கிழமை நீதிபதி விசாரித்தார். அப்போதும் இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்த வேண்டி உள்ளது.
எனவே தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட இந்த ஜாமீன் மனு மீது விசாரணை மீண்டும் நடைபெறும். கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 15-ந் தேதி (நாளை) கோடை கால அமர்வு முன் பட்டியலிட உத்தரவிட்டார். இதன்படி இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.