மணிப்பூர் வன்முறை; புதிய டி.ஜி.பி.யாக ராஜீவ் சிங் பொறுப்பேற்பு
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை எதிரொலியாக புதிய டி.ஜி.பி.யாக ராஜீவ் சிங் பொறுப்பேற்று கொண்டார்.
இம்பால்,
மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில், ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. எனினும், மற்றொரு பழங்குடி பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து, தங்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்க கோரி மே மாத தொடக்கத்தில் மெய்தெய் பிரிவினர் பேரணி நடத்தினர். இதற்கு போட்டியாக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது.
இதில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. இந்த நிலையில், வன்முறை பற்றி முதல்-மந்திரி பைரன் சிங்கிடம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே கேட்டறிந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மணிப்பூருக்கு நேரில் சென்ற மந்திரி அமித்ஷா, தலைநகர் இம்பால், காங்போக்பி, மோரே, சுராசந்த்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிவாரண முகாம்களை பார்வையிட்டார்.
இதன்பின், குகி, மெய்தய் உள்ளிட்ட சமூக உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாதுகாப்பு படையினருடனான சந்திப்பை நேற்று நடத்தினார்.
கடந்த ஞாயிறன்று, ஒரு காவல் உயரதிகாரி உள்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரின் வீடு சூறையாடப்பட்டது. ரைபிள் படை பிரிவின் ஆயுத கிடங்கில் இருந்து ஆயிரம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டும் இருந்தன.
இதனால், மணிப்பூரில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டது. இயல்பு நிலைக்கு மக்கள் மெல்ல திரும்பிய சூழலில், இந்த கலவரம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நிலையில், மணிப்பூரில் புதிய டி.ஜி.பி. நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதன்படி, திரிபுராவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் சிங் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அந்த பதவியை வகித்து வந்த பி. டவுஞ்சல், வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மணிப்பூர் கவர்னர் உத்தரவின்பேரில் இந்த பதவி மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.